தமிழ்நாடு, கேரளாவில் ராகுல் காந்தி பயணம் சாதித்தது என்ன?

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் செப்டம்பர் 7-ம் தேதி நடைப்பயணம் தொடங்கினார். 150 நாள்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, கேரளாவில் 18 நாள்கள் நடைப்பயணத்தை நிறைவுசெய்திருக்கிறார். கேரளாவிலிருந்து கூடலூர் வழியாக மீண்டும் தமிழ்நாட்டுக்குள் வந்த ராகுல் காந்தி, அப்படியே கர்நாடகாவுக்குள் செல்கிறார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலையொட்டி கட்சிக்குள் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவில்லை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முடிவெடுத்துவிட்ட நிலையில், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் உட்பட மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபட்டன. அவர்கள் எல்லோரும் காங்கிரஸின் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து வந்தார்கள். தற்போது இறுதியாக சசி தரூர், மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள்.

அந்த விவகாரங்களிலிருந்து விலகியிருக்கும் ராகுல் காந்தி, நடைப்பயணத்தில் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறார். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் 20 நாள்களுக்கு மேலாக ராகுல் காந்தி மேற்கொண்ட நடைப்பயணம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கூறிவருகிறார்கள்.

ராகுல் காந்தி – சோனியா காந்தி

“ட்விட்டரில் அரசியல் செய்கிறார் என்பது போன்ற விமர்சனங்களை ராகுல் காந்தி மீது எதிர்க் கட்சியினர் சொல்லிவந்தார்கள். ஆனால், இன்றைக்கு அவர் களத்தில் மக்களுடன் மக்களாக இருக்கிறார். கேரளாவில் காங்கிரஸ் கட்சியினரைத் தாண்டி பொதுமக்கள் ஆர்வத்துடன் நடைப்பயணத்தில் பங்கேற்றார்கள்” என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கலைப்பிரிவுத் தலைவரும் செய்தித்தொடர்பாளருமான கே.சந்திரசேகரன், “காங்கிரஸ் கட்சி நேரு குடும்பத்தின் சொத்தா என்று சிலர் கேட்டார்கள். இந்தியா அவர்களுக்கு எழுதிவைக்கப்பட்டிருக்கிறதா என்றும் சிலர் விமர்சித்தார்கள். அப்போது, ராகுல் காந்தி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அமைதியாக செயல்பட்டுக்கொண்டிந்தார்.

அவர் நினைத்திருந்தால் 2004-ல் மத்திய அமைச்சராகி இருக்கலாம். மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டும், அதை அவர் ஏற்க மறுத்துவிட்டார். 2009-ல் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ராகுலிடம் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். அதையும் அவர் ஏற்கவில்லை. அதிகார பதவியில் அவருக்கு மோகம் இல்லை என்பதை அவர் வெளிப்படுத்தினார். அப்படிப்பட்ட ராகுல் காந்தியை, ‘பப்பு’, ‘குழந்தைத்தனமானவர்’, ‘முடிவெடுக்கத் தெரியாதவர்’ என்றெல்லாம் அவதூறு செய்தார்கள்.

கே.சந்திரசேகரன்

ஆனால், அவர் முதிர்ச்சியான ஒரு தலைவர் என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறார். உதாரணமாக, ‘கொரோனா பெருந்தொற்று பெரும் அலையாக வரப்போகிறது. இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுங்கள்’ என்று முன்கூட்டியே எச்சரித்தார். இந்தியாவில் அப்படி எச்சரித்த முதல் தலைவர் ராகுல்தான். ஆனால், இத்தாலி போய்விட்டு வந்ததால் அவர் வேண்டுமானால் டெஸ்ட் எடுத்துக்கொள்ளட்டும் என்று பா.ஜ.க-வினர் கேலி செய்தார்கள்.

ஆனால், ராகுல் காந்தி சொன்னது மாதிரி பெரும் அலையாக கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனாவுக்குப் பிறகு பொருளாதாரப் பாதிப்பு சுனாமி அளவுக்கு வரப்போகிறது என்றும், அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி எச்சரித்தார். நாடாளுமன்றத்தில் பல கேள்விகளை எழுப்பியதுடன், அரசின் தோல்விகளைத் தோலுரித்தார். அவற்றுக்கு பதில் சொல்ல முடியாத ஆட்சியாளர்கள், அவர் மீது தனிப்பட்ட தாக்குதலை நடத்தினார்கள்.

ராகுல் காந்தி நடைபயணம்

ஆனால், அந்த விமர்சனங்களையெல்லாம் தாண்டி, ஒரு தலைவராக தன்னை அவர் நிரூபித்தார். இன்றைக்கு நடைப்பயணத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார். காந்தியடிகள் நடத்திய தண்டி யாத்திரைதான், உலகுக்கே முன்னுதாரணமான யாத்திரை. அந்த யாத்திரை சுமார் 200 கி.மீ தூரம் என்றாலும், அதன் எழுச்சி இந்தியா சுதந்திரமடைவதற்கு ஒரு விதையாக இருந்தது. இன்றைக்கு ராகுல் முன்னெடுத்துச் செல்லும் யாத்திரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. காங்கிரஸ் கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்பு இல்லை என்று சிலர் விமர்சித்தார்கள். அந்த விமர்சனத்தைத் தகர்த்து, மக்களுடன் மக்களாக காங்கிரஸை கலக்கச் செய்துகொண்டிருக்கிறார்.

கேரளாவில் தன்னெழுச்சியாக மக்கள் கூடியதைப் பார்த்தோம். 1990-களில் அத்வானி ரத யாத்திரை நடத்தியபோது, தங்கள் மாநிலத்துக்கு அந்த யாத்திரை வந்துவிடக்கூடாது என்று மக்கள் பயந்தார்கள். ஆனால், தங்கள் மாவட்டத்துக்கும் ராகுல் காந்தியின் யாத்திரை வர வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு இது எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளா இடதுசாரிகள் ஆட்சிசெய்யும் மாநிலமாக இருந்தாலும், ஒரு சிறு பிரச்னைகூட இல்லாமல் வெற்றிகரமாக நடைப்பயணம் நடந்தேறியிருக்கிறது” என்றார் கே.சந்திரசேகரன்.

கேரளாவில் ராகுல் காந்தி நடைப்பயணம்

தொடர் தோல்விகளைச் சந்தித்துவந்ததால், காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் சோர்வடைந்த நிலையில் இருந்தனர். ஆனால், இன்றைக்கு ராகுல் காந்தியே தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்த பிறகு, காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வீட்டில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. இது, வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தளவுக்கு காங்கிரஸுக்கு கைகொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.