தமிழக இளைஞர்களின் எதிர்காலத்துக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? – மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கேள்வி

புதுடெல்லி: இலவச மிக்ஸி, கிரைண்டர் கொடுத்தது தனி விவகாரம். ஆனால் தமிழக இளைஞர்களின் எதிர்காலத்துக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளரும் மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வளர்க்க என்ன சிறப்பு திட்டம் வைத்துள்ளீர்கள்?

தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது. இதைப்பற்றி, தமிழக பாஜக தலைவர்தான் விரிவாகக் கூற முடியும். நான் சொல்வது என்னவெனில், நம் நாட்டின் ஜனநாயக அரசியல் போக்கு, குடும்ப அரசியலில் இருந்து விலகி, வளர்ச்சி மற்றும் இளைஞர்களுக்கான எதிர்காலமாக வளர்கிறது. இதைத்தான் நமது பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். மிக்ஸி, கிரைண்டர் என பலதும் இலவசமாக அளிக்கப்பட்டது தனி விவகாரம். ஆனால், தமிழக இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு அரசியல் கட்சி செய்யப்போவது என்ன? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதை பூர்த்தி செய்யும் ஒரு சிறந்த அரசியல் கட்சியாக பாஜக விளங்குகிறது.

ஆன்மிகம், கோயில் வழிபாடு என்று அதிக தெய்வபக்தி உள்ள மக்கள் வாழும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆனாலும் இங்கு இந்துத்துவா கொள்கையுடைய பாஜக போதிய வளர்ச்சி பெறாததற்கு என்ன காரணம்?

உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்குத் தான் பாஜக, இந்துத்துவா கட்சியாகத் தெரிகிறது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக நாங்கள் இந்துத்துவா கொள்கைகளுக்கான திட்டங்களை அமலாக்கவில்லை. சாதி, மத அடிப்படையில் அரசு சார்பில் ஒரு ரூபாய்கூட செலவழிக்கவில்லை.

ஏனெனில், பாஜக மட்டுமே எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் அனைத்தையும் அளித்து வருகிறது. எங்கள் ஆட்சியில் முத்தலாக் நடைமுறையை தடை செய்ததும் முஸ்லிம் பெண்களின் நன்மைக்காகத்தான். எனவே, பாஜக ஒரு குறிப்பிட்ட மதத்துக்கான கட்சி என்ற புகார்கள் மிகவும் பழமையானவை. கடந்த 40 ஆண்டுகளாக குடும்ப அரசியல் செய்து ஆட்சி செய்யும் கட்சிகளும், எங்களால் அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டன.

பாஜக தனது தேர்தல் அறிக்கையில் இந்துத்துவா திட்டங்களை அறிவித்துள்ளதே?

கடைசியாக நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் நானும் பொறுப்பாளராக இருந்தேன். இதில், ஒரு அறிவிப்புகூட இந்துத்துவா அடிப்படையில் இருக்கவில்லை. இந்துத்துவா என்பது எங்கள் அரசியல் அல்ல. வளர்ச்சி, வாய்ப்புகள், சாதனைகள் போன்றவையே எங்களது அரசியல். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் உள்ளிட்ட அனைத்து மதத்தினருக்கான சேவைதான் எங்கள் அரசியல்.

கடந்த 65 ஆண்டுகளாக இந்தியாபல்வேறு விஷயங்களில் சாத்தியமானவற்றில் இருந்து பின்தங்கி விட்டது. எனவே, அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டை வளர்ச்சி பெற வைப்போம். பஞ்சம் என்பதே இல்லாமல் செய்வோம். தன்மானத்துடன் மக்களை வாழ வைப்போம். கடந்த 2014 வரை குடும்ப அரசியல் நடத்திவந்த கட்சிகள்தான் இந்துத்துவா அரசியல் செய்கின்றன. ராகுல் காந்தியும், தமிழகத்தின் ’எக்ஸ் ஒய் இசட்’ கட்சிகளும்தான் இவர்கள். பாஜக.வின் பார்வை, மக்களுக்கான வளர்ச்சி, நிர்வாகம் மட்டுமே.

உங்களோடு தோழமையாக உள்ள அதிமுக, இப்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, தினகரன் என 4 பிரிவுகளாக சிதறிக்கிடக்கிறது. இதை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுமா?

அதிமுக.வுடன் எங்களுக்கு கூட்டணி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினராக அக்கட்சி தொடர்கிறது. அதன் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது. இதை சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதேபோல், மகாராஷ்டிராவில் சிவசேனாவிலும் ஒரு சிக்கல் உள்ளது. இவற்றை சட்டப்படி தீர்த்துக் கொண்டு இருவரும் பாஜக கூட்டணியில் தொடர்வார்கள்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது உங்களிடம் திமுக காட்டிய எதிர்ப்பு, ஆளும் கட்சியான பிறகு குறைந்துவிட்டதாக புகார் உள்ளதே?

இதற்கு திமுகதான் பதிலளிக்க வேண்டும். எங்களுக்கு அக்கட்சியுடன் எந்த ரகசியத் தொடர்பும் இல்லை என்பது பலரும் அறிந்த தெளிவான ஒன்று.

இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.