இளைஞர்கள் வாழ்வை அழிக்கும் நகர்ப்புற நக்சல்கள் புதிய அவதாரம்: பிரதமர் மோடி ஆவேசம்

பருச்: ‘இளைஞர்கள் வாழ்வை அழிக்கும் நகர்ப்புற நக்சல்கள் புதிய அவதாரத்தில் நுழைய முயற்சிக்கின்றன. அவற்றை குஜராத் அழித்துவிடும்’ என பிரதமர் மோடி ஆவேசமாக பேசி உள்ளார். குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதையொட்டி, அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க, 3 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். நேற்று பருச் மாவட்டத்தில் அவர், நாட்டின் முதல் மொத்த மருந்து பூங்கா உட்பட ரூ.8 ஆயிரம் கோடியிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘‘நகர்ப்புற நக்சல்கள் புதிய தோற்றத்துடன் மாநிலத்திற்குள் நுழைய முயற்சிக்கின்றனர். அவர்கள் தங்களின் உடைகளை மாற்றியுள்ளனர். நமது அப்பாவி இளைஞர்களை தவறாக வழிநடத்துகின்றனர்.

அந்த நகர்ப்புற நக்சல்கள் மேலிருந்து கால் பதிக்கிறார்கள். நம் நாட்டையும், நம் இளைஞர்களையும் அழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள அவர்களை நாம் அனுமதிக்கக் கூடாது. அந்நிய சக்திகளின் கைக்கூலிகளான அவர்களுக்கு குஜராத் என்றும் அடிபணியாது. குஜராத் அவர்களை அழித்து விடும். நர்மதா ஆற்றில் சர்தார் சரோவர் அணை கட்டுவதையும் நக்சல் மனநிலை கொண்டவர்கள் தீவிரமாக எதிர்த்தனர். அவர்களால் தான் அணை தொடர்பாக பல ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்த வேண்டியிருந்தது’’ என்றார். குஜராத் தேர்தலில் இம்முறை ஆம் ஆத்மி போட்டியிட உள்ள நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தை தொடர்ந்து இன்று மத்தியபிரதேசம் செல்லும் மோடி அங்கு உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலில் ரூ.856 கோடியில் மேம்படுத்தப்பட்ட பணிகளின் முதல் கட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

* காஷ்மீர் பிரச்னைக்கு நேரு தான் காரணம்
குஜராத் ஆனந்த் நகரில் பேசிய பிரதமர் மோடி, ‘‘சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு சமஸ்தானங்களின் இணைப்பு பிரச்னையை சர்தார் வல்லபாய் படேல் வெற்றிகரமாக கையாண்டார். ஆனால் காஷ்மீர் பிரச்னையை இன்னொருவர் கையாண்டார். படேலின் அடிச்சுவடுகளை பின்பற்றி நடப்பதால், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு கண்டு, படேலுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தி உள்ளோம்’’ என நாட்டின் முதல் பிரதமரான நேருவை மறைமுகமாக சாடினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.