கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வாருங்கள்: பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

திண்டுக்கல், காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “குஜராத்தில் பிறந்து, ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்த அண்ணல் காந்தியடிகளுக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு மிக மிக அதிகம். தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்த காந்தியடிகள், தமிழை விரும்பிக் கற்றவர். மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்து இட்டவர். திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழ் கற்க வேண்டும் என்று சொன்னவர்.

இவை அனைத்துக்கும் மேலாக உயராடை அணிந்து அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்த அவரை அரையாடை கட்ட வைத்தது இந்தத் தமிழ் மண். வட இந்தியாவினர் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியைக் கற்க வேண்டும், அது தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் காந்தியடிகள். அத்தகைய காந்தியடிகள் பெயரால் அமைந்த பல்கலைக்கழகத்தில் இந்தப் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையில் வருக வருக வருக என வரவேற்கிறேன். கல்வியின் வழியாக மனிதரைச் சமூகத்துக்குப் பயனுள்ளவராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.

“இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. கிராமங்கள் உயர நாடு உயரும்” என்ற காந்தியக் கொள்கையின் அடிப்படையில், தேசத் தந்தை காந்தியடிகளின் நல்லாசியோடு அவர்களுடைய சீடர்களான டாக்டர் ஜி.ராமச்சந்திரன், அவரது துணைவியார் டாக்டர் எஸ்.சௌந்தரம் ஆகியோரால் தொடங்கப்பட்ட கிராமிய பயிற்சி நிறுவனம் இன்று நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக வளர்ந்து, சிறந்து விளங்குகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மாணவர்களும், வெளிநாடுகளைச் சார்ந்த மாணவர்களும், இங்கு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளைப் பயின்று வருகின்றனர் என்பதை அறியும்போது பெருமகிழ்ச்சியடைகிறேன். இதற்கு ஏதுவாக, கல்வி கொடையாக 207 ஏக்கர் நிலத்தினை இப்பல்கலைக்கழத்திற்காக வழங்கிய சின்னாளப்பட்டியைச் சேர்ந்த புரவலர்களை இந்நேரத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

தமிழ்நாட்டில் இன்று மாநில அரசின் கட்டுப்பாட்டின்கீழ் 22 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இவை கலை, அறிவியல், பொறியியல், கல்வியியல், விளையாட்டு, கால்நடை, மருத்துவம், மீன்வளம், தமிழ்வளர்ச்சி, சட்டம், வேளாண்மை மற்றும் இசை ஆகிய துறைகளின்கீழ் திறம்பட செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு, இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாகத் திகழ்கிறது. இதனை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு கல்வித் திட்டங்களைத் தீட்டி வருகிறது.

பெண்களின் உயர்கல்வியினை ஊக்குவிக்க “புதுமைப் பெண்” என்கிற மூவலூர் இராமாமிர்தம்மாள் பெயரில் உயர்கல்வி உறுதித் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வியில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில நிதியுதவித் திட்டம் போன்றவற்றின் மூலமாக அனைவரும் உயர்கல்வி பயில தமிழ்நாடு அரசு ஆவன செய்து வருகிறது. நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி கல்லூரிக் கனவு உள்ளிட்ட பல்வேறு கல்வித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். இவை தமிழக எல்லையைத் தாண்டி அனைத்து மாநில அரசுகளும் உன்னிப்பாக கவனிக்கும் திட்டங்களாக அமைந்துள்ளன.

கல்விச் செல்வத்தை வழங்குவது ஒரு மாநில அரசின் கடமை. மாநில அரசின் இத்தகைய முயற்சிகளை ஆதரிக்கவும், ஊக்குவிக்கவும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வரவேண்டும். அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபோது கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. அவசர நிலை காலத்தின்போது பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. பிரதமர், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகத்திற்கு சேவை செய்வதே கல்வியின் ஒட்டுமொத்த இலக்கு என்ற காந்தியடிகளின் கூற்றிற்கு ஏற்ப முற்போக்குச் சிந்தனையுடன் அறிவியல் சார்ந்த சமூகமாக தமிழ்ச் சமூகத்தைக் கட்டமைக்க இளைஞர்களாகிய உங்களை வேண்டுகிறேன்.

உண்மை, ஒழுக்கம், வாக்கு தவறாமை, அனைவருக்கும் சமமான நீதி, மதநல்லிணக்கம், வகுப்பு ஒற்றுமை, சிறுபான்மையினர் நலன், தனிநபருக்கான மதிப்பு, ஏழைகள் நலன், அகிம்சை, தீண்டாமை விலக்கு, அதிகாரக் குவியலை எதிர்த்தல், ஏகபோகத்துக்கு எதிர்ப்பு, சுதந்திரமான சிந்தனை, அனைவர் கருத்துக்கும் மதிப்பளித்தல், கிராம முன்னேற்றம் ஆகியைவகள்தான் காந்தியத்தின் அடிப்படைகள்!

இவை அனைத்தும்தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் விழுமியங்கள்! இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலமாக காந்தியின் பெயரைச் சொல்ல நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்வோம்.

இந்த பெருமைமிகு விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது பெரு மகிழ்ச்சிக்குரியதாகும். இசை உலகத்தின் மாமேதையான இளையராஜா, மிருதங்க வித்துவான் உமையாள்புரம் சிவராமன், பட்டம் பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

காந்திய நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவர்களாக, பரப்புரை செய்பவர்களாக, நடந்து காட்டுபவர்களாக இளைய சமுதாயம், மாணவர்கள் இயங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனை நீங்கள் சாதித்துக் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையோடு என் உரையை நிறைவு செய்கிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.