கேரள மாநிலத்தில் தொடர்மழை பெய்துவரும் நிலையில், இடுக்கி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட், கொல்லம், கோட்டயம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு யெல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று இடுக்கி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் தொடர்மழை பெய்தது. மூணாறு, குண்டளை, எல்லப்பட்டி, டாப் ஸ்டேஷன், வட்டவடை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் குண்டளை எஸ்டேட் புதுக்கடி பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் உருவாகி மரங்கள், பாறைகள், சகதியும் சேறுமாக மேடான பகுதிகளை கரைந்து தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளை மூழ்கடித்தன.
வாரவிடுமுறை நாள்கள் என்பாதல் சுற்றுலாப் பயணிகள் மூணாறு, டாப் ஸ்டேஷன், வட்டவடை உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகமாக வந்திருந்தனர். இதில் டாப் ஸ்டேஸனிலிருந்து மூணாறு திரும்பிய கோழிக்கோடைச் சேர்ந்த சுற்றுலா வேன் வந்துகொண்டிருந்தது. அபாயத்தை உணர்ந்த டிரைவர் வேனை நிறுத்திவிட்டு பயணிகளை வெளியேறுமாறு கூற, குழந்தைகள் உட்பட 11 பேர் கீழே இறங்கி பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்தனர். சிலர் வேன் சேதமடைந்துவிடக் கூடாது என்பதற்காக தள்ளிக்கொண்டிருந்தனர். அப்போது ரூபேஸ் என்பவர் வேனில் உள்ள செல்போனை எடுக்கச் சென்றபோது காட்டாற்று வெள்ளம் அதிகரித்தது. இதில் வேன் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு ஒரு கிலோ மீட்டர் வரை சென்றதில் உருக்குலைந்தது. மேலும் வேனில் இருந்த ரூபேஸ் மாயமானார். அவரை மூணாறு தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
இதேபோல எல்லப்பட்டி எஸ்டேட் பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் தொடர்மழை காரணமாக சாலைகளில் மரங்கள் விழுந்தும், வெள்ளமும் சென்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் மூணாறுக்குச் செல்ல முடியாமலும், மூணாறிலிருந்து டாப் ஸ்டேஷன் எல்லப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு வர முடியாலும் இடையே சிக்கித்தவித்தனர். தொடர்ச்சியாக சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடந்ததால் அவர்கள் நீண்டநேர காத்திருப்புக்குப் பிறகு பாதுகாப்பாக அனுப்பப்பட்டனர்.
இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மறுஉத்தரவு வரும்வரை இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அத்தியாவசிய வாகனங்கள் தவிர அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் மூணாறு- வட்டவடை இடையே மறுஉத்தரவு வரும்வரை போக்குவரத்து தடைவிதித்து இடுக்கி மாவட்ட கலெக்டர் சீபாஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.