தமிழகத்தில் சின்னம் இல்லாத கட்சிகளுக்கும் பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை: கே.எஸ். அழகிரி

சென்னை: தமிழகத்தில் தேர்தல் சின்னம் இல்லாத கட்சிகளுக்கும் பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அவரது புகைப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நேருவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கே.எஸ்.அழகிரி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: நாட்டில் மக்களாட்சி அமைய காரணமாக இருந்தவர் நேரு. நாட்டில் இருக்க வேண்டியது மன்னர்கள் ஆட்சியா, நில உடமையாளர்களின் ஆட்சியா, முதலாளிகளின் ஆட்சியா என்ற கேள்விகள் எழுந்தபோது மக்களாட்சி அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் அதனை இந்தியாவில் அமைத்தவர் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு.

அவரது ஆட்சிக் காலத்தில்தான் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் உருவாகின. பிஎஸ்என்எல் ஒரு நவரத்னா, நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் ஒரு நவரத்னா என பல்வேறு நவரத்னா நிறுவனங்களை நாட்டுக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் நேரு. இன்று உலக அரங்கில் இந்தியா பெரும் பேரோடு இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் ஜவஹர்லால் நேரு.

உலகிலேயே 2வது பெரிய நிறுவனமாக இந்தியன் ரயில்வே இருக்கிறது. ரயில்வே சொத்துக்கள் அனைத்தும் மக்களுக்கான சொத்தாக உள்ளது. ஆனால், தற்போது இந்தியன் ரயில்வே கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. ரயில் பெட்டிகள் தனியார் மயமாகின்றன; தண்டவாளங்கள் தனியார் மயமாகின்றன. இப்படியே போனால், மக்கள் சொத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தனியார் சொத்துக்களாக மாறும்.

தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறாரே என கேட்கிறீர்கள். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில்தான் பேசுவார்கள். புதிதாக தொடங்கப்பட்ட கட்சிக்கக் கூட ஆளும் கட்சியாக ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்யும். தமிழகத்தைப் பொருத்தவரை, சின்னம் இல்லாத கட்சிகளுக்கும் பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, காங்சிரசின் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.