சபரிமலையில் குவியும் பக்தர்கள் இளம்பெண்களுக்கு அனுமதியா?.. போலீசுக்கு வழங்கிய புத்தகத்தால் சர்ச்சை

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், போலீசுக்கு வழங்கப்பட்ட கைப்புத்தகத்தில் உள்ள வாசகத்தால் மீண்டும் இளம்பெண்களுக்கு அனுமதியா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மண்டல கால பூஜைகளுக்காக இந்த வருடம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கார்த்திகை 1ம் தேதியான நேற்று முதல் சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தொடங்கியது.

அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை கோயில் நடையை திறந்தார். அப்போது, பக்தர்களின் சரணகோஷம் விண்ணைப் பிளந்தது. தொடர்ந்து கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகள் நடந்தன. மண்டல காலத்தின் முதல் நெய்யபிஷேகம் அதிகாலை 3.20 மணி அளவில் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டதால் சபரிமலையில் முந்தைய வருடங்களைப் போல பக்தர்கள் மிக அதிக எண்ணிக்கையில் குவிந்து வருகின்றனர். திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் பக்தர்களுக்கு 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் வசதிக்காக சபரிமலை அருகே நிலக்கல் பகுதியில் 10 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல், செங்கணூர் ரயில் நிலையம், திருவனந்தபுரம் கண்டேஸ்வரர் கோயில், பந்தளம், குமுளி உள்பட கேரளாவில் 12 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில், சபரிமலையில் 10 முதல் 50  வயதுக்குட்பட்ட இளம்பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்று கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பல இளம்பெண்கள் சபரிமலைக்கு  புறப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து இந்து அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த எதிர்ப்பையும் மீறி கேரளாவைச் சேர்ந்த பிந்து  அம்மிணி, கனக துர்கா ஆகிய இளம்பெண்கள் சபரிமலையில் தரிசனம்  செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், கலவரம்  வெடித்தது. எனவே, சபரிமலையில் இளம்பெண்கள் இதுவரை  அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை  எதிர்த்து பல்வேறு இந்து அமைப்புகள் மேல்முறையீடு செய்தன. இதை விசாரித்த  உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட அரசியல் சாசன  பெஞ்சுக்கு வழக்கை மாற்றியது.

இந்நிலையில், மண்டல கால பூஜைகளுக்காக  சபரிமலை கோயில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டபோது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு மாநில உள்துறை  சார்பில் ஒரு கைப்புத்தகம் வழங்கப்பட்டது. அதில், ‘சபரிமலைக்கு யார்  வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தரிசனத்திற்கு உரிய வசதி செய்து கொடுக்க  வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சபரிமலையில் இளம்பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

மீண்டும் வன்முறை வெடிக்கும்
கேரள மாநில பாஜ தலைவர் சுரேந்திரன் கூறுகையில், ‘சபரிமலைக்கு வரும் அனைவருக்கும் தரிசனத்திற்கு வசதி செய்து  கொடுக்க வேண்டும் என்று போலீசுக்கு வழங்கப்பட்டுள்ள கையேட்டில் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இதன்படி, தரிசனத்திற்கு  வரும் இளம்பெண்களையும் அனுமதிக்கவே கேரள அரசு இந்த நடவடிக்கையை  எடுத்துள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இளம்பெண்களை அனுமதித்தால் கேரளாவில் மீண்டும் ஒரு வன்முறை வெடிக்கும்’ என்று எச்சரித்துள்ளார்.

அமைச்சர் மறுப்பு
சபரிமலையில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டியில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து  கொண்டிருப்பதால்  சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் திட்டம் எதுவும்  இல்லை. போலீசுக்கு வழங்கப்பட்டுள்ள கைப்புத்தகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு  அச்சடிக்கப்பட்டது. அதில் ஏராளமான பிழைகள் உள்ளன. இந்த புத்தகம் வாபஸ் பெறப்படும். இதில் அரசுக்கு வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது’ என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.