ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டப் பணிகள்: 143 பேருக்கு பணி நியமன ஆணை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.11.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பேரூராட்சிகள் ஆணையரகம், நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் 671 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 75 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.14 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 4 நகராட்சி அலுவலகக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,


தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்தைச் சார்ந்த சிகரலப்பள்ளி மற்றும் 143 குடியிருப்புக்களுக்கு ரூ.31.82 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் கிருஷ்ணகிரி ஒன்றியத்திலுள்ள வெலகலஹள்ளி மற்றும்

39 குடியிருப்புகளுக்கு ரூ.9.90 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

திண்டுக்கல் மாவட்டம், பாலசமுத்திரம் பேரூராட்சிக்கு ரூ.9.62 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம், கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியத்திலுள்ள 5 கிராம ஊராட்சிகளில் உள்ள 17 குடியிருப்புகளுக்கும், அண்ணாகிராமம் ஒன்றியத்திலுள்ள 4 கிராம ஊராட்சிகளில் உள்ள 18 குடியிருப்புகளுக்கும் ரூ.9.21 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்;

மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள ஆனையூர் பகுதிக்கு ரூ.8.97 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம், தேனி மாவட்டம், மேலசொக்கநாதபுரம் பேருராட்சிக்கு ரூ.41.72 கோடி மதிப்பீட்டிலான பாதாள சாக்கடைத் திட்டம்;

என மொத்தம் ரூ.111 கோடியே 24 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் 6 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் கொடுங்கையூரில் ரூ.170.97 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 120 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்;

நெசப்பாக்கத்தில் ரூ.47.24 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டர் உயர்தர மறுசுழற்சி நீர் நிலையம் (TTUF); போரூரில் நாளொன்றுக்கு 60 லட்சம் லிட்டர் திறன் கொண்ட புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம்; புழல், புத்தகரம், சூரப்பட்டு மற்றும் கதிர்வேடு பகுதிகளுக்கு ரூ.82.61 கோடி மதிப்பீட்டில் விரிவான குடிநீர் வழங்கல் திட்டம்;

சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் கீழ் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் கூவம் ஆற்றின் கரையோரம் – சூளைமேட்டில் 12 லட்சம் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; அடையாற்றில் ரூ. 16.16 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் மூலமாக கலக்கும் கழிவுநீரை இடைமறித்து அமைக்கப்பட்டுள்ள மாற்று வழிகள்; ஜாபார்கான்பேட்டை மற்றும் சாமியார் தோட்டம் பகுதிகளில் ரூ. 10.62 கோடி மதிப்பீட்டில் அடையாற்றில் நேரடியாக கலக்கும் கழிவுநீரை இடைமறித்து கழிவுநீரிறைக்கும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள்;

சென்னை நதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் அடையாற்றில் மழை நீர் வடிகால் மூலமாக கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.4.31 கோடி மதிப்பீட்டில் நாளொன்றிற்கு 0.6 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மாற்று முறை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்;

அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில் மற்றும் மாம்பலம் கால்வாயில் நேரடியாக கலக்கும் கழிவுநீரை இடைமறித்து சுத்திகரிக்க ரூ. 5.04 கோடி மதிப்பீட்டில் தாடண்டர் நகரில் நாளொன்றிற்கு 4 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையத்திற்கு அனுப்பும் பணி;

அடையாற்றில் நேரடியாக கலக்கும் கழிவுநீரை இடைமறித்து நந்தனம் விரிவாக்கம், டர்ன் புல்ஸ் ரோடு பகுதியில் தற்போது பயன்பாட்டில் உள்ள கழிவுநீர் அமைப்போடு இணைக்கப்பட்டு, ராதாகிருஷ்ணபுரம் குடிசை பகுதிகளுக்கு ரூ. 6.36 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கழிவுநீர் திட்டப் பணிகள்;

ஐஸ்ஹவுஸ், கீரிம்ஸ்ரோடு, கோடம்பாக்கம், வடக்கு மயிலாப்பூர், தெற்கு மயிலாப்பூர், நந்தனம், டி.எஸ். பார்க், தாமஸ்ரோடு, சுதந்திர தின பூங்கா பகுதிகளில் அமைந்துள்ள கழிவு நீரேற்று நிலையங்களில் ரூ. 3.12 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகள்;

கிண்டி மற்றும் ஈக்காட்டுத்தாங்கலில் ரூ.18.73 கோடி மதிப்பீட்டில் இடைமறித்தல் மற்றும் மாற்றுவழிகள் அமைக்கப்பட்ட பணிகள்; ஆலந்தூர், மாதவ பெருமாள் மேற்கு தெருவில் ரூ. 88 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலையோர நீரேற்று நிலையம்;

மாம்பலம் கால்வாய் வழியாக அடையாற்றில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்க ரூ. 14.21 கோடி மதிப்பீட்டில் தாடண்டர் நகரில் 4 MLD (நாளொன்றுக்கு 4 மில்லியன் லிட்டர்) கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; கீழ்ப்பாக்கத்தில் ரூ.7.05 கோடி மதிப்பீட்டில் நவீன குடிநீர் மற்றும் கழிவுநீர் பரிசோதனைக் கூடம்;

நெசப்பாக்கம், தி.நகர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, சிஐடி நகர், மேற்கு அரும்பாக்கம் பகுதிகளில் அமைந்துள்ள கழிவுநீர் உந்து நிலையங்களில் ரூ. 2.54 கோடி மதிப்பீட்டிலான மேம்பாட்டுப் பணிகள்;

சின்னதம்பி தெரு, மந்தவெளிப்பாக்கம், பார்தசாரதி ராம்நகர், அயோத்தி குப்பம், நமச்சிவாயபுரம், அருணாச்சலம் தெரு, லாக்நகர், அன்பு காலனி, சீதம்மாள் காலனி, அமுதம் காலனி, கிருட்டிணம்மாள் ரோடு, குமாரப்ப ரோடு, பல்லகுமனியம் மற்றும் புலியூர்புரம் பகுதிகளில் அமைந்துள்ள கழிவு நீரேற்று நிலையங்களில் ரூ.2.38 கோடி மதிப்பீட்டிலான மேம்பாட்டு பணிகள்;

நொளம்பூர் கால்வாய் செயின்னேஜ் 2120-ல் இருந்து முகப்பேர் கழிவுநீரேற்று நிலையம் வரை கழிவு நீர் கலக்குமிடங்களை தடுப்பதற்காக ரூ. 99 லட்சம் மதிப்பீட்டில் இடைக்குறுக்கீடு கழிவுநீரகற்று கட்டமைப்பு அமைக்கப்பட்டு, கழிவுநீரை மாற்று பாதையில் திருப்பும் பணி;

சென்னை, கே.கே. நகர், விருகம்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, சத்தியமூர்த்தி பிளாக், பாரதிதாசன் காலனி, திரு நகர், சாரதி நகர், கோத்தமேடு, குலசேகரபுரம், காந்தி நகர், விஓசி நகர், அபித் காலனி, சாமியார் தோட்டம் மற்றும் அழகிரி நகர் பகுதிகளில் அமைந்துள்ள கழிவுநீர் உந்து நிலையங்களில் ரூ. 1.98 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப்பணிகள்;

என மொத்தம் ரூ.398.51 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 18 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

பேரூராட்சிகள் ஆணையரகம்

பேரூராட்சிகள் ஆணையரகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நவீன பேருந்து நிலையம்;

நகராட்சி நிர்வாகத் துறை

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சியில் ரூ.38.15 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட பழைய பேருந்து நிலையம், அதன் அருகில் ரூ.19.02 கோடி செலவில் கட்டப்பட்ட பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், தென்னம்பாளையத்தில் ரூ.13.46 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை, திருப்பூர் மாநகராட்சியில் ரூ.4.68 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட பூ மார்க்கெட், தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.20 கோடி செலவில் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட காமராஜ் மார்க்கெட், பி.ஏ.ஒய். நகரில் ரூ.1.95 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானம்;

ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், திருத்துறைப்பூண்டி நகராட்சி, வடபாதியில், புதிய உரக்கிடங்கு வளாகத்தில் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 KLD (நாளொன்றுக்கு 10 கிலோ லிட்டர்) கொள்ளளவு கொண்ட கசடுகழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், கூத்தாநல்லூர் நகராட்சி, குனுக்கடி உரக்கிடங்கில் கசடு வளாகத்தில் ரூ.2.85 கோடி செலவில் 20 KLD கொள்ளளவு கொண்ட கசடுகழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்;

நூற்றாண்டு நிறைவு திட்டத்தின் கீழ், போடிநாயக்கனூர் நகராட்சியில் ரூ.1.50 கோடி செலவில் தினசரி சந்தை, ரூ.1 கோடி செலவில் தியான மண்டபம், சுப்புராஜ் நகரில் ரூ.1 கோடி செலவில் பயணியர் தங்கும் விடுதி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கம்பம் நகராட்சியில் ரூ.4.10 கோடி செலவில் கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்;

என மொத்தம் ரூ.109.56 கோடி மதிப்பீட்டில் 12 முடிவுற்ற நகராட்சி நிர்வாகத் துறை திட்டப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மணலியில் – துளசி நகர், வி.எஸ். மணி நகர், கோகுலம் 6-வது தெரு, மாதவரத்தில் – புழல் சில்வர் ஸ்கை சாலை, சண்முகாபுரம் அருகில், பத்மாவதி நகர், கதிர்வேடு-பிர்லா அவென்யு, கூட்டுறவு சங்கம் சாலை- சத்தியமூர்த்தி நகர், செம்பியம் ரெட்ஹில்ஸ் சாலை அருகில் திருமலை சீனிவாசா நகர், பத்மகிரி நகர், BP நகர், மகாத்மா காந்தி தெரு, செல்வம் நகர் இரண்டர்வது பிரதான சாலை, அம்பத்தூரில் கங்கையம்மன் கோயில் தெரு, ஐசிஎப் காலனி- தாமிரபரணி தெரு, அடையாரில் விஜிபி செல்வா நகர், பெருங்குடியில் கற்பகாம்பாள் நகர், மீனாட்சி நகர் (மியாவாக்கி பூங்கா) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 18 புதிய பூங்காக்கள்;

சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் நிதியின் கீழ் அடையாறு ஆற்றின் கரையோரம் திரு.வி.க. பாலம் முதல் எம்.ஆர்.டி.எஸ். பாலம் வரை ரூ.5.40 கோடி மதிப்பீட்டில் 30,000 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணிகள்:

மாதவரத்தில் பத்மாவதி நகர், விக்டரி பீல்டு தெரு, யானைக்கவுனி- சுந்தராபுரம், அண்ணா நகரில் நேரு நகர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 4 புதிய விளையாட்டுத் திடல்கள் மற்றும் அடையாரில் கோட்டூர்புரம் அடையாறு ஆற்றங்கரை அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல்;

தண்டையார்பேட்டை – இளங்கோ நகர், திரு.வி.க. நகர் – சுப்பராயன் தெரு, அடையாறு – தரமணி கோதாவரி தெரு, பெருங்குடி – ஜல்லடையான்பேட்டை திருவள்ளூவர் தெரு, மடிப்பாக்கம் குளக்கரை தெரு, சோழிங்கநல்லூர் – நெடுஞ்செழியன் தெரு ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 6 இரவு காப்பகங்கள்; இராயபுரம் – சிட்டென்ஹாம்ஸ் சாலை, பைக்கிராப்ட் முதலாவது தெரு ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 2 சிறப்புக் காப்பகங்கள்; தேனாம்பேட்டை – கிரியப்பா சாலை, டும்மிங் சாலை, அடையாறு – திருவள்ளுவர் சாலை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 3 வீடற்றோருக்கான காப்பகங்கள்;

ஆழ்வார்பேட்டை – சி.பி. ராமசாமி சாலையில் ரூ.2.63 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், தேனாம்பேட்டை – லாயிட்ஸ் காலனியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.79 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம், மாதவரம், சின்னசேக்காட்டில் ரூ.9.33 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஈரக்கழிவிலிருந்து எரிவாயு தயாரிக்கும் நிலையம்;

என ரூ.49.49 கோடி மதிப்பீட்டிலான 38 முடிவுற்ற பெருநகர சென்னை மாநகராட்சி பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

அடிக்கல் நாட்டப்பட்ட கட்டடங்களின் விவரங்கள்

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் திருமுருகன்பூண்டி நகராட்சி- ராக்கிபாளையம் சாலை, சோளிங்கர் நகராட்சி – சித்தூர் சாலை, திருக்கோவிலூர் நகராட்சி – சேவலை சாலை, உளுந்தூர்பேட்டை நகராட்சி – சேலம் சாலை ஆகிய இடங்களில் தலா ரூ.3.50 கோடி மதிப்பீட்டில், என மொத்தம் ரூ.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 4 நகராட்சி அலுவலகக் கட்டடங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் 685 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 75 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 4 புதிய கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்குதல்

பேரூராட்சிகள் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 29 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 48 வாரிசுதாரர்களுக்கும், நகராட்சி நிர்வாகத் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 66 வாரிசுதாரர்களுக்கும், என மொத்தம் 143 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர், பதிவுரு எழுத்தர், தூய்மைப் பணியாளர், அலுவலக உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் 15 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.