புகழ்பெற்ற டில்லி ஜும்மா மசூதிக்குள் பெண்களுக்கு… நோ என்ட்ரி! விசாரணைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு| Dinamalar

புதுடில்லி ‘புதுடில்லியில் உள்ள உலகப்புகழ் பெற்ற முகலாயர் காலத்து நினைவு சின்னமான ஜும்மா மசூதிக்குள் தனியாகவோ அல்லது குழுவாகவோ வரும் பெண்களுக்கு அனுமதி கிடையாது’ என, மசூதி நிர்வாகம் அறிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட 17ம் நுாற்றாண்டு நினைவுச்சின்னமான ஜும்மா மசூதி புதுடில்லியில் உள்ளது. இங்கு முஸ்லிம் சமூகத்தினர் தொழுகை நடத்த வருவது மட்டுமின்றி நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியரும் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

விபரம் தெரியவில்லை

இந்த ஜும்மா மசூதியின் மூன்று முக்கிய முகப்பு வாயில்களில், நேற்று ‘நோட்டீஸ்’கள் ஒட்டப்பட்டுள்ளன. தேதி குறிப்பிடாமல் ஒட்டப்பட்டுள்ள இந்த நோட்டீஸ்கள் எப்போது ஒட்டப்பட்டன என்ற விபரம் தெரியவில்லை. அவை தற்போது மக்கள் கவனத்துக்கு வந்துள்ளன.

இதில், ‘தனியாகவோ அல்லது குழுவாகவோ வரும் பெண்களுக்கு ஜும்மா மசூதிக்குள் அனுமதி கிடையாது’ என, குறிப்பிடப்பட்டுள்ளது. இது, பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தவறான முடிவு

இது குறித்து புதுடில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறியதாவது:

ஜும்மா மசூதிக்குள் பெண்கள் நுழைய தடை விதிப்பது முற்றிலும் தவறான முடிவு. தொழுகை நடத்த ஆண்களுக்கு என்ன உரிமை உள்ளதோ அதே உரிமை பெண்களுக்கும் உள்ளது. பெண்களுக்கு தடை விதிக்க யாருக்கும் உரிமை இல்லை.

இந்த உத்தரவு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஜும்மா மசூதி இமாமுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளோம்.

இது போன்ற உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது, வெட்கக்கேடானது. இதை இந்தியா என நினைத்தனரா அல்லது ஈராக் என நினைத்தனரா? பெண்களுக்கு இழைக்கப்படும் பாகுபாடுகளுக்கு எதிராக யாரும் குரல் எழுப்ப மாட்டார்கள் என நினைத்தார்களா?

அரசியலமைப்பை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. இந்த தடை விலக்கப்படும் வரை ஓயமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுடில்லி மகளிர் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீசில், தனியாக வரும் பெண்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மசூதி நிர்வாக குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருந்தால், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன் குறிப்புகளை அளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் 28ம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து, ஜும்மா மசூதி இமாம் ஷாஹி இமாம் சையது அஹ்மத் புகாரி கூறியதாவது:

மசூதியோ, கோவிலோ, குருத்வாராவோ அனைத்து இடங்களிலும் மக்கள் வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை. ஜும்மா மசூதியிலும் இதுவரை தடை விதிக்கப்படாமல் தான் இருந்தது.

ஆனால், சமீபத்தில் நடந்த சில சம்பவங்களால் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அனுமதி மறுப்பு

வழிபாடு நடத்தும் இந்த இடத்தில் பெண்கள் தனியாக வந்து தங்கள் ஆண் துணைக்காக காத்திருப்பது ஏற்புடையது அல்ல. இது அதற்கான இடமும் அல்ல. எனவே தான் இப்படியொரு உத்தரவை பிறப்பிக்க வேண்டி வந்தது.

அதே நேரம், வழிபாடு செய்யும் நோக்கத்துடன் வரும் பெண்கள் தனியாகவே, குழுவாகவோ வந்தால் அவர்கள் அனுமதிக்கப்படுவர். இன்று கூட 25 பெண்கள் குழுவாக வந்தனர். அவர்களை நாங்கள் தடுக்கவில்லை.

இசை, ‘வீடியோ’க்கள் எடுப்பதற்காக பலர் ஜும்மா மசூதிக்குள் வருவது அதிகரித்தது. அதற்கு தடை விதித்து உத்தரவிட்டோம். அதை போல தான், தவறான நோக்கத்திற்காக மசூதிக்குள் வருபவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளோம். இது பெண்கள் அனைவருக்குமான உத்தரவு அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்து வருவதாகத் தெரிவித்துஉள்ளது.

வி.எச்.பி., கண்டனம்!

இது குறித்து வி.எச்.பி., எனப்படும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியதாவது:புதுடில்லி ஜும்மா மசூதி பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னம். இது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு முஸ்லிம் பெண்கள் தொழுகை நடத்த பாலின அடிப்படையில் உரிமை மறுக்கப்படுகிறது. இப்போது பெண்கள் நுழையவே தடை விதிக்கப்படுவது, பெண்கள் உரிமைக்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது. இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

திரும்ப பெற ஒப்புதல்!

இந்த விவகாரம் தொடர்பாக, ஜும்மா மசூதியின் இமாம் புகாரியுடன் புதுடில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா பேச்சு நடத்தியதாகவும், அவரது கோரிக்கையை ஏற்று, மசூதிக்குள் வரும் பெண்கள் அதன் மரியாதையையும், புனிதத்தன்மையையும் காக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பெண்களுக்கான தடை உத்தரவை திரும்ப பெற இமாம் ஒப்புக்கொண்டதாகவும் கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.