பாஜகவை வீழ்த்த களமிறங்கும் வைகோ: மக்களவைத் தேர்தலுக்கு ரெடி!

2024 பாராளுமன்ற தேர்தலுக்காக மதவாத சக்தி பாஜகவிற்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேற்கொள்வார் என நெல்லையில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ கூறினார்.

நெல்லையில் மதிமுக நிர்வாகி செல்வகோபால் என்ற ஸ்ரீதர் உடல் நலக்குறைவால் உயிர் இழந்த நிலையில் அவரது இல்லத்திற்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.அதனை தொடர்ந்து மதிமுக நிர்வாகி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பால் விலை உயர்வு தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் கர்நாடக மாநிலத்திலும் கேரள மாநிலத்திலும் கூட பால் விலை உயர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உர விலை உயர்வு உள்ளிட்டவைகள் காரணமாக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தான் தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தனிப்பட்ட இயக்கத்தின் ஊதுகோலாக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 20க்கும் மேற்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தேவை இல்லாமல் கிடப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார். தனது கடமைகளை விட்டுவிட்டு தேவையில்லாத செயல்களில் தமிழக ஆளுநர் ஈடுபடுகிறார்.

ஆறு பேர் விடுதலையை எதிர்த்து மறு சீராய்வு மனு செய்ய காங்கிரஸிற்கு உரிமை இருப்பதால் சென்று உள்ளார்கள். திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒரே கோட்பாடுடன் இருக்கிறோம். நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தில் சரியான தீர்ப்பு கிடைத்ததை போல் சீராய்வு மனு விவகாரத்திலும் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் மதிமுக உறுதியாக உள்ளது. தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் எந்தவித மாற்றமும் கிடையாது.

ராகுல் காந்தி நடைபயணத்தில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மதவாத சக்தியை முழு பலத்துடன் எதிர்க்க காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை நன்றாக உருவாக்க வேண்டும் என ராகுல் காந்தியிடம் நேரில் வலியுறுத்தியுள்ளேன். மதிமுக பொது செயலாளர் வைகோ பல நடை பயணங்களை மேற்கொண்டு உள்ளார் மக்களிடம் எழுச்சி இருந்தது. ஆனால் அது வாக்கு வங்கியாக மாறவில்லை.

தேர்தலில் போட்டியிடுவது என்பது எனது விருப்பமில்லை. கட்சி தலைமை வற்புறுத்தினால் கட்டாயம் தேர்தலில் போட்டியிடுவேன். 2024 இல் மதவாத சக்திகளை எதிர்த்து அனைத்து இயக்கங்களும் ஓரணியில் திரண்டால் மிகப்பெரிய பலன் கிடைக்கும். பாராளுமன்ற தேர்தலுக்காக மதவாத சக்தி பாஜகவை முழு பலத்துடன் எதிர்க்க அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மதிமுக பொது செயலாளர் வைகோ நிச்சயம் மேற்கொள்வார்” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.