பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் பாடசாலைகளில் பௌதீக வளங்களை திறம்பட பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்

நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் பாடசாலைகளில் பௌதீக வளங்களை திறம்பட பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் – பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான தேசிய பேரவை உபகுழுவின் தலைவர் திரு பாட்டலி சம்பிக்க ரணவக்க…

 

உணவு உற்பத்தி, மின்சார உற்பததி போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாடசாலைகளில் காணப்படும் பௌதீக வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக  (28) தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்குக் காணப்படும் ஊட்டச்சத்து மற்றும் போக்குவரத்துப் பிரச்சினை, பொருளாதார அபிவிருத்தியில் பாடசாலைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராயும் நோக்கில் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதிநிதிகள், கல்வி அமைச்சு, திறைசேரி ஆகியவற்றின் பிரதிநிதிகள் உப குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.

பாடசாலைகளுக்குச் சொந்தமான வெற்றுக் காணிகளில் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ள முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் கட்டடங்கள் தவிர்ந்த அவற்றுக்குச் சொந்தமாகவுள்ள காணிகள் குறித்த கணக்கெடுப்பொன்றை நடத்தி அதன் தகவல்களை வழங்குமாறு உபகுழு கல்வி அமைச்சுக்குப் பணிப்புரை விடுத்தது.

அத்துடன், பாடசாலைகளின் கூரைகளைப் பயன்படுத்தி சூரியப்படலங்களைப் பொருத்தி அதன் ஊடாக மின்சார உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்றும், பாடசாலைகளின் மின் பாவனைகளைக் கண்காணிக்க எரிசக்தி முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  

பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை பாடசாலைகளுடன் சம்பந்தப்பட்ட சமூகத்தினரையும் உள்ளடங்கியதாக கூட்டுறவு முயற்சியாக முன்னெடுப்பது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கும் என்றும், உணவு வழங்கும் செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை கல்வி அமைச்சு கண்காணிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. பயனுள்ள மற்றும் வெளிப்படையான பொறிமுறையொன்றைத் தயாரிப்பதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்கு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அதேநேரம், எரிபொருள் பிரச்சினை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்குப் பயணிப்பதில் பல்வேறு போக்குவரத்து சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாக ஆசிரிய பிரதிநிதிகள் குழுவின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்து உரிமையாளர்களால் சிசுசரிய பாடசாலை போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்டாலும் பேரூந்து மற்றும் அவற்றின் உதிரிப்பாக இறக்குமதிக்குக் காணப்படும் மட்டுப்பாடுகளால் போதியளவு பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட காகிதம் முதலிய எழுது பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்திருப்பதால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. அப்பியாசக் கொப்பிகளின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதால் இலங்கை அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் அப்பியாசக் கொப்பிகளை அச்சிட்டு மானிய விலையில் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராயுமாறும் குழுவின் தலைவர், கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.