மின்சார சபையின் செலவுகளை ஈடுகட்ட, மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்

மின்சார சபையின் செலவுகளை ஈடுகட்ட மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் – மின்சார சபை பிரதிநிதிகள் தேசிய பேரவை உப குழுவில் அறிவிப்பு

  • எதிர்வரும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தாலும் அது மின்சார சபையின் நட்டத்தை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்பதால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் மேற்கொண்ட கோரிக்கைக்கு தற்பொழுது அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவில் நேற்று (29) வெளிப்பட்டது.

அதற்கமைய, 2023 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும், அதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் மின்சார சபையின் மேலதிகப் பொது முகாமையாளர் ரொஹான் செனெவிரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இடம்பெற்ற பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவில் இந்த விடயங்கள் புலப்பட்டன.

மின்சக்தித் துறையில் காணப்படும் சிக்கல்களை தீர்ப்பது தொடர்பான முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் மின்சக்தித் துறையுடன் சம்பந்தப்பட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

தற்பொழுது காணப்படும் நட்டத்தை ஈடுகட்டுவதற்கு மின்சாரக் கட்டணம் 70% அளவில் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் மின்சார சபையின் பிரதிநிதிகள் இதன்போது குறிப்பிட்டனர்.

மின்சார சபையின் நட்டத்தை ஈடுகட்டும் நோக்கில் மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தாலும் அது தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குச் சென்று வர்த்தகங்கள் வீழ்ச்சியடையும் ஆபத்து தொடர்பிலும் குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மின்சார சபை தற்பொழுது வங்கிகள் மற்றும் மின்சக்தி விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்குச் செலுத்தவேண்டிய கடனாக 650 பில்லியன் ரூபாய் காணப்படுவதாகவும் இதன்போது புலப்பட்டது. இதில் சுமார் 35 பில்லியன் ரூபாய் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி விநியோக நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும், சுமார் 75 பில்லியன் ரூபாய் அனல் மின் உற்பத்தி விநியோகஸ்தர்களுக்கும் செலுத்த வேண்டியுள்ளதாகவும் மின்சார சபை பிரதிநிதிகள் இதன்போது குறிப்பிட்டனர். அதற்கமைய, எதிர்வரும் காலத்தில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் 50 பில்லியன் ரூபாவில் இந்த விநியோகஸ்தர்களின் கடன்களில் ஒரு பகுதியை வழங்க எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

சூரிய சக்தி உள்ளிட்ட மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையின் பிரதிநிதிகள், மின்சக்தியுடன் தொடர்புபட்ட ஏனைய தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் தமது சிக்கல்கள் மற்றும் மின்சக்தித் துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புகள் தொடர்பில் குழுவில் அறிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ இந்திக அனுருத்தவும் கலந்துகொண்டார். மின்சக்தித் துறை பிரதிநிதிகளுடன் அவர்களுக்குக் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடிய இராஜாங்க அமைச்சர், இந்த சிக்கல்களுக்கு தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மனோ கணேசன் மற்றும் கௌரவ எம். ராமேஸ்வரன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.