93 தொகுதிகளில் வாக்குப்பதிவு: குஜராத்தில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்

அகமதாபாத்: குஜராத்தில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, 93 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள182 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மிஉள்ளிட்ட 60 கட்சிகளைச் சேர்ந்த833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 2.54 கோடி பேர்வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 14,975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 1.13 லட்சம் தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். 40,066 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தேர்தல் அலுவலர்கள் நேற்று மாலையே அவரவர் வாக்குச் சாவடிகளுக்கு சென்றடைந்து, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். தேர்தலில் வாக்களிப்பதற்காக சுமார் 2,200 பேர் குஜராத் திரும்பிஉள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மோடியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது அகமதாபாத்தின் 16 தொகுதிகளில் 12 தொகுதிகள் பாஜக வசம் உள்ளன. 16 தொகுதிகளிலும் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏஐஎம்ஐஎம் கட்சியின் வேட்பாளர்களும் களத்தில் இருப்பதால், தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதைக் கணிக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பூபேந்திர படேல், காட்லோடியா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அமி யாக்னிக்கும், ஆம் ஆத்மி சார்பில் விஜய் படேலும் களத்தில் உள்ளனர்.

வட்கம் தொகுதியில் பாஜக சார்பில் மணிபாய் வகேலாவும், காங்கிரஸ் சார்பில் ஜிக்னேஷ் மேவானியும் போட்டியிடுகின்றனர்.

காந்தி நகர் தெற்கு தொகுதியில் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறிய அல்பேஷ் தாக்கோர், அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஹிமான்ஷு படேல், ஆம் ஆத்மி சார்பில் தோலட் படேல் போட்டியிடுகின்றனர்.

விராம்காம் தொகுதியில் பாஜக சார்பில் ஹர்திக் படேலும், காங்கிரஸ் சார்பில் லக்காபாயும், ஆம் ஆத்மி சார்பில் குவார்ஜி தாக்கோரும் போட்டியிடுகின்றனர்.

இடைத்தேர்தல்கள்

இதேபோல, உத்தர பிரதேசத்தின் மெயின்புரி மக்களவைத் தொகுதி, ராம்பூர், கட்டவுலி சட்டப்பேரவைத் தொகுதிகள், ராஜஸ்தானின் சர்தார்ஷாஹர் சட்டப்பேரவைத் தொகுதி, பிஹாரின் குர்ஹானி சட்டப்பேரவைத் தொகுதி, சத்தீஸ்கரின் பானி பிரதாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி ஆகியவற்றுக்கும் இன்று இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன.

குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது. அதே நாளில், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.