
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் அருகே காஜிபுரா கிராமத்தை சேர்ந்த லயசிதா (19). இவர், எலகங்கா அருகே ராஜனகுன்டேயில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டெக் படித்து வந்தவர். இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில், தனது தாய், 2 சகோதரிகளுடன் எலகங்கா அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். எலகங்காவில் இருந்து தினமும் கல்லூரிக்கு வர முடியாத காரணத்தால், கல்லூரிக்கு சொந்தமான விடுதியிலேயே லயசிதா தங்கி படித்தார்.
இந்த நிலையில், நேற்று காலையில் அவர் வழக்கம் போல கல்லூரிக்கு வந்திருந்தார். பின்னர் வகுப்பறையில் சக மாணவிகளுடன் லயசிதாவும் அமர்ந்திருந்தார். அப்போது, பெங்களுரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வரும் பவன் கல்யாண், லயசிதாவை பார்க்க ராஜனகுன்டேவுக்கு வந்திருந்தார்.

கல்லூரி வகுப்பறையில் இருந்த லயசிதாவிடம் பேச வேண்டும் என்று பவன் கல்யாண் அழைத்ததாக தெரிகிறது. இதையடுத்து, கல்லூரி வளாகத்தில் வைத்து 2 பேரும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது பவன் கல்யாண், லயசிதா இடையே திடீரென்று வாக்குவாதம் உண்டானது. அந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று ஆத்திரமடைந்த பவன் கல்யாண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லயசிதாவை சரமாரியாக குத்தினார். இதில், வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினார்.
பின்னர் அதே கத்தியால் பவன் கல்யாணும் தன்னை தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து கல்லூரியில் இருந்த மாணவர்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு லயசிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு பவுரிங் மருத்துவனைக்கு பவன் கல்யாண் அனுப்பட்டார்.அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முன்னதாக இதுகுறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராஜனகுன்டே போலீசார் மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். காதல் விவகாரத்தில் லயசிதாவை கொலை செய்து விட்டு, பவன் கல்யாண் தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, 2 பேரின் செல்போன்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் பவன் கல்யாணிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கல்லூரிக்குள் புகுந்து மாணவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ராஜனகுன்டே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜனகுன்டேயில் கல்லூரி மாணவியை குத்திக் கொன்ற மாணவர் பவன் கல்யாண் நிருபதுங்கா ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இதுபற்றி கல்லூரி நிர்வாகம் கூறுகையில், பவன் கல்யாண் எங்கள் கல்லூரியில் தான் படிக்கிறார். முதலாம் ஆண்டு படித்து வருவதால், அவரை பற்றிய மற்ற தகவல்கள் தெரியவில்லை. கடந்த மாதம் 30-ந் தேதியும், இன்றும் (அதாவது நேற்று) பவன் கல்யாண் கல்லூரிக்கு வரவில்லை. அந்த மாணவிக்கும், பவன் கல்யாணுக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பதும் தெரியவில்லை, என்று கூறியுள்ளது.
ராஜனகுன்டேயில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி லயசிதா, தனியார் கல்லூரியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் சேர்ந்திருந்தது தெரியவந்துள்ளது. லயசிதாவின் தந்தை இறந்துவிட்டதால், அவரது தாய் தான் குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். அதே நேரத்தில் பவன் கல்யாணும், லயசிதாவும் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால், 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதற்கிடையில், எலகங்கா அரசு மருத்துவமனைக்கு வந்த லயசிதாவின் தாய், 2 சகோதரிகள் லயசிதாவின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.