
கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பலருக்கு உடல் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படுகிறது. வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர் அதிகம் இருக்கும் என்றாலும், இம்முறை வழக்கத்திற்கு மாறாக அதிக குளிர் நிலவுகிறது.
குறிப்பாக தலைநகர் டெல்லியில் குளிர்பிரசேதங்களை விட அதிக குளிர் பதிவாகிறது. இந்நிலையில் இந்த குளிரில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று விரிவாக பார்க்கலாம்.

கடுங்குளிரால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
கடுமையான குளிர் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியத்தை அதிகப்படுத்துகிறது. அதிலும், ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
ஏனென்றால் குளிர் காலத்தில் ரத்தக்குழாய் சுருக்கம் ஏற்படும். அதனால் ரத்த அழுத்தமும், இதயத்துடிப்பும் அதிகரிக்கும். இதனைத் தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதே போல் தொடர்ந்து சிறுநீர் கழிப்பதால், நீர்ச்சத்து குறைபாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால் அதிகமாக தண்ணீர் அருந்துவது அவசியம்.
ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் இருப்பவர்களுக்கு கடுங்குளிர் ஆகாது. குளிர்காலத்தில் உலர்ந்த காற்றை சுவாசிப்பதால், ஆஸ்துமா போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்.
சில வைரஸ்கள் குளிர்காலத்தில் வீரியத்துடன் இருக்கும் என்பதால், அவை கடுமையான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
கடுங்குளிர்காலத்தில் செய்ய வேண்டியவை!
அடிக்கடி சிறுநீர் கழிப்பதால், நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் என்பதால், அதிக திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும்.
ஈரமான உடைகளை அணியக்கூடாது. ஆடைகள் ஈரமாகிவிட்டால் உடனடியாக மாற்றிவிட வேண்டும். இல்லை என்றால் உடலின் வெப்பநிலை குறைந்துவிடும்.

முடிந்தவரை வீட்டிற்குள் இருப்பது அவசியம். வெளியே செல்வதை தவிர்த்தால் முடிந்த வரை குளிர் காற்றிடம் இருந்து தப்பிக்கலாம்.
போர்வையை கொண்டு உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். உறைபனி இருக்கும் இடங்களில் ஹீட்டர் வைத்து வெப்பநிலையை ஈடுசெய்ய வேண்டும். வெந்நீரையே பருக வேண்டும்.
எம்மாதிரியான உடைகளை அணிய வேண்டும்?
குளிர்காலத்தில் எப்போதும் கையுறை அணிவது அவசியம். எடை குறைவாக உள்ள, இருக்கமாக இல்லாத உடைளை அணியுங்கள். அதனால் உடல் வெப்பநிலை சீராக இருக்கும். வாயை ஸ்கார்ஃப் கொண்டு மூடிவது அவசியம். இதனால் நுரையீரல் பாதிக்கப்படாது.

கடுங்குளிரில் செய்யக்கூடாதவை!
மது உடலை வெப்பமாக்குமா?
மது உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும் என்றாலும் கூட, உடலில் நீரின் அளவை குறைத்துவிடும். அது மிகவும் ஆபத்தானது. மனித உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியலில் இருக்க வேண்டும். வெளியே வெப்பம் குறையும் போது, உடல் அதற்கேற்ப சரிசெய்யும். மது அருந்தினால் அப்படி சரிசெய்யாது.

எதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் கவனம் தேவை?
நடுக்கம், குழப்பம், மந்தமான பேச்சு, சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் கவனம் தேவை. இவை உடலில் வெப்பநிலை குறைவதற்கான அறிகுறிகள். அதே போல் உணர்வின்மை, கூசுவது, வெளிர் அல்லது நீல – சாம்பல் நிறத்தில் தோல் இருப்பது ஆகியவை தோல் திசுக்கள் உறைந்திருப்பதை உணர்த்துபவை.
இதுபோன்று இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டியது அவசியம்.
newstm.in