காத்மாண்டு: நேபாளத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட போக்கரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்தில் சிக்கிய விமானம் எரிந்து தீக்கிரையானதில் 68 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் பயணித்த ஐந்து இந்தியர்களும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நேபாளத்தில் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான போக்கராவுக்கு நேற்று ‘யெட்டி ஏர்லைன்ஸ்’ விமானம் புறப்பட்டது. இதில் 68 பயணியர் நான்கு விமான ஊழியர்கள் இருந்தனர். இதில் ஐந்து இந்தியர் உட்பட 10 வெளிநாட்டு பயணியரும் இருந்தனர்.
காலை 10:33 மணிக்கு காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் காலை 11:00 மணிக்கு போக்கரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. இந்த புதிய விமான நிலையம் கடந்த ௧ம் தேதிதான் திறந்து வைக்கப்பட்டது.
அப்போது பழைய விமான நிலையம் மற்றும் புதிய விமான நிலையம் இடையே உள்ள சேட்டி நதிக் கரையில் விழுந்து இந்த விமானம் நொறுங்கியது.
உடனடியாக தீப்பற்றி எரியத் துவங்கியது. நதிக் கரை மற்றும் மலைப் பிரதேசத்தில் விமானம் விழுந்ததால் உடனடியாக மீட்பு பணி மேற்கொள்ளப்பட முடியவில்லை.
தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் கடுமையாக போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. விமான நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி இதில் பயணித்த ஐந்து இந்தியர்களின் பெயர் அபிஷேக் குஷ்வாகா பிஷால் சர்மா அனில் குமார் ராஜ்பர் சோனு ஜெய்ஸ்வால் சஞ்சயா ஜெய்ஸ்வால் என்பது தெரியவந்துள்ளது.
விபத்தில் இவர்களும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இவர்களது நிலைமை குறித்து இந்தியத் தூதரகம் தொடர்ந்து விசாரித்து வருகிறது.
இந்த சம்பவத்துக்கு நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளார். உடனடியாக அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் ஒரு நாள் துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் இன்று பொது விடுமுறையாக அறிவிக்க முடிவு எடுக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க ஐந்து பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து போக்கரா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விமானங்கள் புறப்பாடு வருகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் சீனாவின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டது.
தொடரும் விபத்துக்கள்
சீரற்ற வானிலை மற்றும் மோசமான நிலப்பரப்புகளுக்கு இடையே ஓடுதளப் பாதை அமைந்துள்ளது போன்றவை காரணமாக நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்து ஏற்படுகிறது. கடந்தாண்டு மே 29ல் முஸ்டாங் மாவட்டத்தில் தாரா விமான நிறுவன விமானம் விழுந்து நொறுங்கியது ஒரு இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட ௨௨ பேர் உயிரிழந்தனர். கடந்த 2016ல் தாரா விமான நிறுவனத்தின் விமானம் முஸ்டாங் மாவட்டத்தில் விபத்தில் சிக்கி அதில் இருந்த ௨௩ பேரும் உயிரிழந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்