75-வது ராணுவ தினம் | ஆயுதப்படையினரின் நிகரற்ற துணிச்சல், தியாகம் – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்

பெங்களூரு: 75-வது ராணுவ தினத்தை முன்னிட்டு நேற்று (ஜனவரி 15) பெங்களூருவில் நடைபெற்ற இந்திய ராணுவத்தின் வீரம் மற்றும் சாகசங்களை உள்ளடக்கிய சவுர்யா சந்தியா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

இதில் பாதுகாப்பு தலைமை தளபதி அனில் சவ்ஹான், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, துணை தளபதி பிஎஸ் ராஜூ, மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் ராணுவ தின வாழ்த்துக்களைத் தெரிவித்து தமது உரையைத் தொடங்கிய ராஜ்நாத் சிங், சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தலைமை தளபதியாக பணியாற்றிய கே.எம். கரியப்பா, கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதையும். இந்திய ராணுவத்தை பலப்படுத்தியதில், அவரது இன்றியமையாதப் பங்களிப்பையும் நினைவுகூர்ந்தார்.

சுதந்திரம் அடைந்தது முதல் இதுநாள் வரை, பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்வதைத் தலையாயக் கடமையாகக் கொண்டு பணியாற்றிவரும் ஆயுதப்படையினர், எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு முறியடிக்கும் வல்லமை மிக்கவர்களாக இருப்பதற்காகவும் பாராட்டு தெரிவித்தார். குறிப்பாக மேற்கு மற்றும் வடக்கு பிராந்திய எல்லைகளில் பணியாற்றும் வீரர்கள், அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக முறியடித்து வருவதாகவும். தங்களது நிகரற்ற துணிச்சல், தியாகம் ஆகியவற்றின் மூலம் நாட்டின் தொன்மைவாய்ந்த பாரம்பரியத்தை நிலைநாட்டி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

சர்வதேச அளவில், வலிமையான ராணுவத்தை பெற்ற நாடாக இந்தியா திகழ்வதாகவும், வீரம், விசுவாசம், ஒழுக்கம் ஆகியவற்றை பறைசாற்றும் இந்திய ஆயுதப் படை, நாட்டின் வலிமையான மற்றும் நம்பிக்கைத் தூணாக இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

சமூகம், அரசியல், பொருளாதாரம் என அனைத்திலும் அண்மைகாலமாக வியக்கத்தகு மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதைக் குறிப்பிட்ட அவர். இதற்கு ஏற்ப பாதுகாப்பு சவால்களும் மாறி இருப்பதையும் சுட்டிக்காட்டினார். இவற்றை முறியடிப்பதற்காக, டிரோன்கள், நீருக்கு அடியில் செல்லும் டிரோன்கள் மற்றும் ஆயுதங்கள் தற்போது செயற்கை நுண்ணறிவுத்துறையால் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார். எனவே இந்த சகாப்தம் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய சகாப்தமாக இருக்கிறது. ஏனெனில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இந்த சவால்களை அதிகரித்துள்ளன எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறையில் சக்திவாய்ந்த உபகரணங்களை உருவாக்குவதில், மத்திய அரசு எப்போதும் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அதுவே நாட்டின் மேம்பாட்டிற்கு தற்போது முக்கியப் பங்காற்றி வருவதாகவும் கூறினார். நமது பாதுகாப்புத்துறை வலிமையானதாக இருப்பதால்தான், இந்தியா உலகின் சக்திவாய்ந்த மிகப் பெரிய பொருளாதாரமாக மாறி இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். கடந்த நிதியாண்டில், 83.57 பில்லியன் டாலர் அளவுக்கு, அன்னிய நேரடி முதலீடு பெற்று இந்தியா சாதனை படைத்திருப்பதையும் ராஜ்நாத் சிங் நினைவுகூர்ந்தார்.

75-வது ராணுவ தினத்தின் ஒருபகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மக்களின் பங்களிப்பை அதிகரித்து, இளைஞர்கள் நமது ராணுவம் குறித்து தெரிந்துகொள்ள ஏதுவாக, தலைநகர் டெல்லியை விட்டு வெளியே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்த நிகழ்ச்சியில் ராணுவத்தினரின் விமானம் மற்றும் ஹெலிகாப்டர், சாகசங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.