ஓபிஎஸ் குஜராத் பயணம்… டீலை முடிக்க அவசரம்… அதிமுக பின்னணி அரசியல்!

தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் குறித்த விஷயம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிமுக போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில்
எடப்பாடி பழனிசாமி
,
ஓ.பன்னீர்செல்வம்
அணிகளுக்கு இடையில் மோதல் எழுந்துள்ளது. இருவருமே தங்கள் தரப்பில் வேட்பாளர்களை நிறுத்த மும்முரம் காட்டி வருகின்றனர். முதலில் எடப்பாடி தரப்பு தமிழக பாஜகவை சந்தித்து ஆதரவு கேட்டனர். அதன்பின்னர் ஓபிஎஸ் தரப்பு நேரில் சென்றது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

இதற்கிடையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். எங்கள் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும் படிவத்தில் நான் கையெழுத்திட உள்ளேன். அதில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போடுவது அவரது விருப்பம். அதிமுக கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு திரட்டுவோம் எனத் தெரிவித்தார்.

அகமதாபாத் பொங்கல் விழா

இந்த சூழலில் இன்று குஜராத் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அம்மாநிலத்தின் அகமதாபாத் நகரில் தமிழ் சங்கம் சார்பில் நடக்கும் பொங்கல் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார். அங்கு பாஜக தலைவர்களை சந்தித்து பேச வாய்ப்பிருப்பதாவும் சொல்லப்படுகிறது. இல்லையெனில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு சில விஷயங்களை அனுப்பும் வகையில் ஏற்பாடு செய்துவிட்டு வரலாம்.

டெல்லியின் தயவு

ஏற்கனவே அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் டெல்லியின் தயவை நோக்கி ஓ.பன்னீர்செல்வம் காய்களை நகர்த்தி வருகிறார். இந்த வரிசையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்திலும் பாஜகவை ஆதரவை பெற முயற்சிப்பதாக தெரிகிறது. இந்த தேர்தலில் பாஜக போட்டியிடுவது பற்றி இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு போட்டியிட தயாராகி விட்டது.

இரட்டை இலை சின்னம்

இந்நிலையில் குஜராத் பயணம் ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவு திரட்டும் முயற்சியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிமுக தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருதரப்பில் இருந்தும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் இரட்டை இலை சின்னம் பெறுவதில் சிக்கல் ஏற்படும். ஏனெனில் வேட்பாளர் விண்ணப்ப படிவத்தில் கட்சி தலைவர் கையெழுத்திட வேண்டும்.

ஓபிஎஸ் வைக்கும் கோரிக்கை

தற்போதைய சூழலில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரண்டு பதவிகளும் இருப்பதாகவே தேர்தல் ஆணையம் கருதுகிறது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இன்னும் அதிகாரமிக்க நபராக திகழ்ந்து வருகிறார். எனவே இரட்டை இலை சின்ன ஒதுக்கீட்டில் சிக்கல் வந்தால் டெல்லி பார்த்து கொள்ள வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்படலாம்.

அதிமுக பொதுக்குழு வழக்கு

இதுதவிர அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு இன்னும் நிலுவையில் இருக்கிறது. அடுத்த சில வாரங்களில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த தீர்ப்பை அடுத்து தங்கள் தரப்பின் நடவடிக்கைகள், அதற்கு டெல்லியின் ஆதரவு ஆகியவற்றை உறுதிபடுத்தி கொள்ளவும் ஓபிஎஸ்சின் குஜராத் பயணம் உதவிகரமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.