மதுரை ஒபுளாபடித்துறை மேம்பாலம் கட்டுமானப் பணி மந்தம் – சித்திரைத் திருவிழாவிற்குள் முடியுமா?

மதுரை: ரூ.20 கோடியில் வைகை ஆறு குறுக்கே கட்டப்படும் ஒபுளாபடித்துறை மேம்பாலம் கட்டுமானப் பணி, மந்தகதியில் நடக்கிறது. சித்திரைத் திருவிழாவிற்குள் இந்த பாலம் பயன்பாட்டிற்கு வராவிட்டால் கடந்த ஆண்டை போல் வைகை ஆறு கரையில் திருவிழாவில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

மதுரை வடகரை, தென்கரை பகுதி மக்கள், வாகன ஒட்டிகள் எளிதாக வைகை ஆற்றை கடந்து இரு நகரப்பகுதிகளுக்கு சென்று வருவதற்காக ஆரம்ப காலத்தில் ஏவி மேம்பாலம், யானைக்கல் மேம்பாலம் மற்றும் தரைப்பாலங்கள் இருந்தன. தற்போது தரைப்பாலங்களை இடித்துவிட்டு அந்த இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் ஒபுளாபடித்துறை அருகே வைகை ஆற்றின் வடகரை மற்றும் தென்கரை பகுதிகளை இணைத்த தரைப்பாலத்தை இடித்துவிட்டு தற்போது நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் மாநகராட்சி ரூ.20 கோடியில் மேம்பாலம் கட்டுகிறது.

இந்த பாலம் கட்டுமான பணி நிறைவடைந்து செயல்பாட்டிற்கு வந்தால் மதுரை அண்ணா பஸ் நிலையம், மதிச்சியம், ஆழ்வார்புரம், கோரிப்பாளையம், அரசு ராஜாஜி மருத்துவமனை, தல்லாக்குளம் போன்ற பகுதிகளில் இருந்து மக்கள் இந்த பாலம் வழியாக ஆற்றை கடந்து முனிச்சாலை சென்று அங்கிருந்து வாழக்காய்ப்பேட்டை, இஸ்மாயில் புரம், காமராஜர் சாலை, நெல்பேட்டை, கீழ்வெளி வீதி, கீழ வாசல் போன்ற நகரின் தென் பகுதிகளுக்கு எளிதாக சென்று வருவார்கள்.

அதனால், ஏவி மேம்பாலம், யானைக்கல் மேம்பாலங்களில் தற்போது உள்ள போக்குவரத்து நெரிசலில் 25 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. தென்கரை பகுதி மக்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருவதற்கு தற்போது பல்வேறு நகரச் சாலைகளை சுற்றி மிகுந்த சிரமப்பட்டு வந்து செல்கிறார்கள். மதுரையின் வடகரை பகுதியில்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, முக்கிய கல்லூரிகள் போன்ற முக்கிய அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் இருப்பதால் தென் கரை பகுதி மக்கள், வடகரை வருவதற்கு மிகுந்த சிரமப்படுகிறார்கள்.

அதனால், ஒட்டுமொத்த வாகனங்களும் ஏவி மேம்பாலம், யானைக்கல் மேம்பாலம் வழியாக வருவதால் கோரிப்பாளையம் பகுதியில் நிரந்தரமாக நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், ஒபுளாபடித்துறையில் இதற்கு முன் இருந்த தரைபாலத்தில் வைகை ஆற்றில் 1,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தாலே பாலம் தண்ணீரில் மூழ்கிவிடும். அதனால், இரு கரை நகர்பகுதி மக்களும் மழைக்காலத்தில், ஆற்றில் தண்ணீர் வரும்போது பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமப்பட்டார்கள். தற்போது பாலம் கட்டப்படுவதால் இனி வைகை ஆற்றில் எத்தகைய வெள்ளம் வந்தாலும் எளிதாக மக்கள் இந்த பாலம் வழியாக வைகை ஆற்றை கடந்து செல்வார்கள்.

இந்நிலையில் ஒபுளாபடித்துரை மேம்பாலம் கட்டுமானப் பணி மந்தகதியில் நடக்கிறது. இந்த பாலத்தின் தென் கரைப் பகுதி பாலம் இன்னும் முடியவில்லை. பணிகளும் விரைவாக நடப்பதில்லை. அப்படியே இந்த தென்கரைப்பகுதி பாலம் முடிந்து முனிச்சாலையுடன் இணைக்கப்பட்டாலும், இந்த பாலத்தின் இரு புறமும் உள்ள வைகைகரை சாலைகளை மண் போட்டு உயரப்படுத்த வேண்டும். வரும் ஏப்ரல் கடைசி வாரத்தில் மதுரை சித்திரைத் திருவிழா தொடங்குகிறது.

இந்த திருவிழாவில் ஒபுளாபடித்துறை வைகை ஆற்றின் இரு பகுதிகளும் முக்கிய பங்கு வகிக்கும். இந்த பகுதியின் ஆழ்வார்புரம் பகுதியில்தான் கள்ளழகர் ஆற்றில் இறங்குவார். அதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அன்று மதுரையில் இந்த பகுதியில் திரள்வார்கள். கடந்த ஆண்டு விழாவிலே இந்த பகுதியில் திரண்ட கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 10 பேர் வரை காயமடைந்தனர். 2 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டும் இந்த பாலம் பணி முடியாவிட்டால் இதே பகுதியில் மீண்டும் சித்திரைத் திருவிழாவில் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், சித்திரைத் திருவிழாவிற்குள் ஒபுளாபடித்துரை பாலம் பணியை முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஒபுளாபடித்துறை கட்டுமானப் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மார்ச் மாதம் பாலத்தை திறக்க உள்ளோம்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.