வண்டியை திருப்பிய சுதீஷ்: ஈரோட்டை விட டெல்லி முக்கியம் – சேலம் பயணம் இல்லையாமே!

எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில்
தேமுதிக
துணைச் செயலாளர் சுதீஷ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் அதற்கு சுதீஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேமுதிக கூட்டணியிலிருந்து விலகியது.

பின்னர் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. அந்த கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தேர்தல் தோல்விக்குப் பின்னர் அமமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியது.

அதன் பின்னர் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக தனித்து களம் கண்டது. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேமுதிக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டது. தே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தொடங்கின.

அமமுக சார்பில் வேட்பாளரை அறிவித்த டிடிவி தினகரன், தேமுதிக வேட்பாளரை அறிவித்தாலும் அவர்களிடமும் நாங்கள் பேசுவோம் என்று கூறினார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் சந்திக்க உள்ளதாக ஒரு தகவல் இன்று காலை வெளியானது. சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சுதீஷ் இன்று மாலை சந்திக்க உள்ளதாக கலசப்பாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் கூறியதாக தகவல் பரவியது.

இதன் மூலம் அதிமுக கூட்டணியில் தேமுதிக மீண்டும் இடம்பெறப் போகிறது. பாமக அந்த கூட்டணியிலிருந்து விலகிய நிலையில் தேமுதிக அந்த இடத்தை பிடிக்க முயற்சிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த தகவலை சுதீஷ் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நான் சந்திக்க செல்வதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அந்த தகவல் தவறானது. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் வருகிற 1-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசிய போது, “மக்களவைத் தேர்தல் கூட்டணியை இப்போதே தேமுதிக உறுதி செய்யாது. தனக்கான வாய்ப்பு இரண்டு மூன்று இடங்களில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, ஒரு கட்சியை வைத்து மற்றொரு கட்சியிடம் பேரம் பேசி தனக்கான சீட்டுகளை அதிகரிக்க முயற்சி செய்யும். அதற்கு எப்படி பலன் கிடைக்கிறது என்பதை அந்த சமயத்தில் தான் கூற முடியும்” என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.