மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க மீண்டும் கால அவகாசம்!

மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் வருகிற பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது ஏற்கனவே பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்தும் பொருட்டு மின் நுகர்வோர்களின் தொலைபேசி எண்களை மின் இணைப்புடன் இணைத்துள்ளது. அதன்தொடர்ச்சியாக, தற்பொழுது வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளை பெற்றிருக்கும் மின் நுகர்வோர்கள் பற்றிய விவரங்களை புதுப்பிக்கும் பொருட்டு அவர்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது ஒன்றிய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகம் எங்கும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.

மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைக்க அனைத்து மின் அலுவலகங்களிலும் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் காலக்கெடு ஜனவரி 31ஆம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், ஜனவரி 31ஆம் தேதிக்கு மேல் கால அவகாசம் வழங்கப்படாது எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

அதன்படி, மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் வருகிற பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது, இறுதி நீட்டிப்பு எனவும், இதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை 90.69 சதவீதம் பயனர்கள் தங்களது மின் இணைப்பை ஆதாருடன் இணைத்துள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைக்க தமிழகத்தில் உள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலங்களிலும் பண்டிகை தினங்கள் தவிர்த்து, ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 05.15 வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்கள் மூலம் தங்களது மின் இணைப்பு எண்ணிணை ஆதாருடன் இணைத்துக் கொள்ளலாம்.

இது தவிர ஆன்லைன் மூலமும் மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
https://adhar.tnebltd.org/Aadhaar/
என்ற லிங்கில் ஆதார் எண்ணை இணைக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml
என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.