என்னங்க ரூ.5,300 கோடி; பட்ஜெட்ல ஒன்னுமே இல்ல- கொதிக்கும் கர்நாடக காங்கிரஸ்!

மத்திய பட்ஜெட்
2023-24ஐ நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்தப்படும் பத்ரா மேலணை திட்டத்திற்கு 5,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியானது.

தேர்தல் வியூகம்

வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு தேர்தல் வியூகமாக இருக்கலாம் என பரவலாக பேசப்பட்டது. இதுதொடர்பாக பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், எங்கள் மாநிலத்திற்கு பட்ஜெட்டில் எதுவுமே இல்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நிர்மலா சீதாராமனும், கர்நாடக மாநிலமும்

மேலும் பேசுகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தான். அதனால் அவர் சொந்த மாநிலத்திற்கு ஏதாவது செய்வார் என பெரிதும் எதிர்பார்த்தோம். ஆனால் ஒன்றுமே கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறுகையில், இது டபுள் எஞ்சின் அரசு இல்லை. ட்ரபுள் எஞ்சின் அரசு.

பத்ரா மேலணை திட்டம்

பட்ஜெட் பணக்காரர்களுக்கு ஆதரவாகவும், ஏழைகளை வஞ்சிக்கக் கூடியதாகவும் உள்ளது. பத்ரா மேலணை திட்டத்திற்கு 5,300 கோடி ரூபாய் ஒதுக்கியது பற்றி கேட்கையில், அந்த திட்டத்திற்கு 23 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. ஆனால் மத்திய அரசு நான்கில் ஒரு பங்கை ஒதுக்கியிருக்கிறது. இதில் 40 சதவீத கமிஷனை எடுத்துவிட்டால் 3,000 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும்.

ஓரங்கட்டிவிட்டதாக புகார்

அதுவும் மத்திய அரசு ஒதுக்கிய தொகை ஓராண்டிற்கா? இல்லை 5 ஆண்டுகளுக்கா? என தெரியவில்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எங்கள் மாநிலத்தில் இருந்து தான் தேர்வு செய்யப்பட்டார். அது நியாபகம் இருக்கிறதா? எனத் தெரியவில்லை. கர்நாடகாவை முற்றிலும் ஓரங்கட்டி விட்டார்.

மாநில மக்களின் கோரிக்கைகள்

நம்முடைய மாநில அரசோ மத்திய அரசின் சொல் பேச்சை கேட்டுக் கொண்டு செயல்படுகிறது. மாநில மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. வழக்கமாக கர்நாடக மக்களுக்கு பட்ஜெட்டில் என்னென்ன தேவை என்பது பற்றி முதல்வர் மற்றும் எம்.பிக்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபடுவர். அதன்பின்னர் மத்திய அரசிடம் கோரிக்கைகள் வைக்கப்படும்.

அநீதியான செயல்

ஆனால் இம்முறை அத்தகைய நடைமுறையே இல்லை. கர்நாடகாவில் இருந்து 25 மக்களவை எம்.பிக்கள், 6 மாநிலங்களவை எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கர்நாடகாவிற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வேண்டியதை பெற்று தருவதில் சிறிதும் ஆர்வம் காட்டுவதில்லை. இவையெல்லாம் அநீதி எனக் குற்றம்சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.