ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்..!

டெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அதிமுகவில் நடைபெறும் உச்சக்கட்ட குழப்பத்தால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சி இருக்கும் வரை ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் இணைந்து செயல்பட்டு வந்தனர். ஆனால் ஆட்சி  முடிவுக்கு வந்த பின்பு ஒற்றைத் தலைமை யார் என்று எழுந்த பஞ்சாயத்தில்  எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு துருவங்களாக செயல்பட்டு  வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  அறிவிக்கப்பட்டது. இரு அணிகள் சார்பிலும் தனித்தனியே வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

அதிமுக எடப்பாடி அணி சார்பில் முன்னாள் எம்எல்ஏ  கே.எஸ்.தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் சார்பில் செந்தில் முருகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளும் தனித்தனியாக  வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற கேள்வி  எழுந்துள்ளது. இதையொட்டி உச்சநீதிமன்றத்தில் திடீரென எடப்பாடி அணி  சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அவர் தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது உச்சநீதிமன்ற தீர்ப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும் என்று  உத்தரவிடப்பட்டது. இந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கருத்தையும் கேட்டு ஒருமித்த வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இடைத்தேர்தலுக்கு   குறுகிய காலம் மட்டுமே உள்ளதால் வேட்பாளர் தேர்வு செய்வதை கடிதம் வாயிலாக மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தினர். இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவளிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன்படி, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் விண்ணப்ப படிவம் வினியோகம் செய்யும் நடவடிக்கைகள் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கட்சி தலைமை சார்பில் ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் விண்ணப்ப படிவம் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசை  முறைப்படி பூர்த்தி செய்து 5ம் தேதி (நேற்று) இரவு 7 மணிக்குள் ஒப்படைக்குமாறு, கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அவை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தடைந்துள்ளன. இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புபடி அதிமுக அவைத்தலைவர் செயல்படவில்லை. ஒரு வேட்பாளர் தேர்வு ஒருதலைபட்சமாக உள்ளது. இதுபோன்ற சட்டமீறல் செயலுக்கு நாங்கள் ஒருபோதும் துணை போகமாட்டோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் கூறியுள்ளனர்.

இதனால் அதிமுகவில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பதில்  உச்சக்கட்ட குழப்பம்  நீடிக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாளாகும். இன்று  வேட்பாளர் யார் என்று இறுதி முடிவு செய்தால் மட்டுமே நாளைய தினம் வேட்புமனுவை அதிமுக சார்பில் தாக்கல் செய்ய முடியும். இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் முகாமில் மாறி மாறி ஆலோசனைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அடுத்தடுத்து அரங்கேறும் நிகழ்வுகளால் அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

அவருடன், சி.வி.சண்முகம் எம்பி, முன்னாள்  எம்எல்ஏ இன்பதுரை ஆகியோர் சென்றுள்ளனர். அவர்கள், அதிமுக பொதுக்குழு  உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் கடிதத்தை இன்று பிற்பகல் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைந்தனர். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்த தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. அதில்; அதிமுக வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழ்மகன் உசேனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த அதிகாரம் குறுகிய காலத்துக்கு, அதாவது இந்த இடைத்தேர்தலுக்கு மட்டுமே என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.