
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஜீவா செட் பகுதியை சேர்ந்தவர் நசரத். இவரது மனைவி சாஜிதா. இந்த தம்பதிக்கு ரியாஸ் கான் (19) என்ற மகன் இருந்தான். இவர் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை அதிகளவில் விளையாடி அதற்கு அடிமையாகியுள்ளார். தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார். நேராக காவிரி ஆற்று பழைய பாலத்தின் நடுவில் திடீரென வண்டியை நிறுத்தினார்.

பின்னர் தனது நண்பர்களுக்கு செல்போனில் ஒரு மெசேஜ் அனுப்பி திடீரென ரியாஸ் காவேரி ஆற்று பாலத்தில் இருந்து காவேரி ஆற்றில் குதித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பால சுப்பிரமணியம் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அவர் இது குறித்து கருங்கல்பாளையம் காவல் நிலையம் மற்றும் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருங்கல்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.
ரியாஸ் குதித்த பகுதி மிகவும் ஆழமான பகுதியாகும். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் பரிசலில் சென்று மீனவர்கள் உதவியுடன் ரியஸ் கானை தேடி வந்தனர். இரண்டு மணி நேரம் போராடி ரியஸ் கான் உடலை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் ஆன்லைன் ரம்மியால் ரியஸ் கான் தற்கொலை செய்துகொண்டது பள்ளிபாளையம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆன்லைன் ரம்மியால் இளைஞர்கள் அதிகளவில் தற்கொலை செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.