ராமநாதபுரம் மாவட்ட பாஜக நிர்வாக பொறுப்புகளை கலைத்த அண்ணாமலை – பின்னணி என்ன?

சென்னை: “ராமநாதபுரம் மாவட்டத்தில், கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டத்தில், கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை தாங்கள் அனைவரும் கட்சிப்பணியினை தொடர்ந்து செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

புதிய மாவட்டத் தலைவர்: இதைத்தொடர்ந்து அண்ணாமலை வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தரணி ஆர்.முருகேசன் புதிய மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்படுகிறார் என்றும், அவருடைய பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபா கார்த்திகேயன், போகலூர் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவர். சத்திரக்குடி அருகே செவ்வூரைச் சேர்ந்தவர் மோடி மகி என்ற மகேந்திரன். இவரும் பாஜகவில் உள்ளார். பிரபா கார்த்திகேயன், பாஜகவில் இளைஞரணி நிர்வாகி பதவிக்கு மகேந்திரனிடம் பணம் கேட்டதாக பாஜக நிர்வாகிகள் சமூக வலை தளங்களில் தகவல் பரப்பினர்.

இந்த தகவலை பார்த்த கட்சி நிர்வாகிகள் பலர் பிரபா கார்த்திகேயனை பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் தனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியதாக பிரபா கார்த்திகேயன், ராமநாதபுரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து பஜார் போலீஸார் ராமநாதபுரம் மாவட்ட பாஜக பொறுப்பாளர் ஜிபிஎஸ். நாகேந்திரன், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பவர் நாகேந்திரன், மோடி முனீஸ், செவ்வூரைச் சேர்ந்த மகேந்திரன், தேர்போகியைச் சேர்ந்த கோசா மணி, பரமக்குடியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.