போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.1,032 கோடி பணப்பலன்: நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, ஏப்ரல்-2022 முதல் நவம்பர்-2022 வரை ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் என மொத்தம் 3,414 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.1031.32 கோடி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணப் பலன்களை வழங்கும் பொருட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி,

முதற்கட்டமாக 1.12.2022 அன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த மே-2020 முதல் மார்ச்-2021 வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள், என மொத்தம் 1,241 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை  உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.242.67 கோடியும்,

இரண்டாம் கட்டமாக, 27.03.2023 அன்று, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஏப்ரல்-2021 முதல் மார்ச்-2022 வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள், என மொத்தம் 1,626 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக் கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.308.45 கோடியும் போக்குவரத்துத் துறை அமைச்சரால் வழங்கப்பட்டது.

அரசுப் போக்குவரத்துக் கழகம்

மேலும்  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல்-2022 முதல் நவம்பர்-2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள், என மொத்தம் 3,414 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக் கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.32 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்தாலும், தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு இதனைச் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.