மக்கள் தொகையில் சீனாவை முந்தினோம்: 142.86 கோடியுடன் உலகில் முதலிடம்| We surpassed China in population record! 142.86 crores to top the world

புதுடில்லி, ஐ.நா.,வின் புள்ளிவிபரங்களின்படி, 142.86 கோடி மக்கள் தொகையுடன், உலகின் அதிக மக்கள்தொகை உள்ள நாடுகளில், இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது.

ஐ.நா., மக்கள்தொகை நிதி அமைப்பின் சார்பில், 1950 முதல் உலக மக்கள்தொகை விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன்படி, அந்த ஆண்டில், இந்தியாவின் மக்கள்தொகை, 86.1 கோடியாக இருந்தது. சீனா, 114.4 கோடியுடன் முதலிடத்தில் இருந்தது.

கடந்த, 73 ஆண்டுகளாக, இந்தப் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட, இந்த அமைப்பின் புள்ளிவிபரங்களின்படி, 142.86 கோடி மக்கள் தொகையுடன், இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சீனா, 142.57 கோடியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஐ.நா., மக்கள்தொகை நிதி அமைப்பின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட, 2023ம் ஆண்டுக்கான உலக மக்கள்தொகை அறிக்கையில், இந்தியா குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டன.

அதன்படி, இந்திய மக்கள்தொகையில், 0 – 14 வயதுடையோர் எண்ணிக்கை, 25 சதவீதமாகும். 10 – 19 வயதுடையோர், 18 சதவீதம்; 10 – 24 வயதுடையோர், 26 சதவீதம்; 15 – 64 வயதுடையோர், 68 சதவீதமாகும். 65 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை, 7 சதவீதமாகும்.

கேரளா மற்றும் பஞ்சாபில் அதிக வயதானவர்களும், பீஹார், உத்தர பிரதேசத்தில் இளம் வயதினரும் அதிகளவில் உள்ளனர். வரும், 2050ல் இந்தியாவின் மக்கள்தொகை, 166.8 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை, 131.7 கோடியாகவும் இருக்கும் என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து, ஐ.நா., மக்கள்தொகை நிதி அமைப்பின் இந்திய பிரிவு நிர்வாகியான ஆன்ட்ரீயா வோஜ்னார் கூறியுள்ளதாவது: இந்தியாவின், 142 கோடி மக்கள்தொகையை, 142 கோடி வாய்ப்புகளாக பார்க்க வேண்டும். உலகிலேயே மிகவும் அதிகளவிலான இளைஞர்கள் இந்தியாவில் உள்ளனர். இந்த, 25.4 கோடி இளைஞர்கள், புதிய வாய்ப்புகள், புதிய சிந்தனைகள், பிரச்னைகளுக்கான புதிய தீர்வுகளை தரக் கூடியவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

சீனா குசும்பு!

இது குறித்து சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங்க் வென்பின் நேற்று கூறியதாவது: மக்கள்தொகை மிகவும் முக்கியம்தான். அதைவிட திறன்கள்தான் முக்கியம். எண்ணிக்கையைவிட தரம் தான் முக்கியம். அதன்படி பார்த்தால், சீனாவில், 90 கோடி வேலை பார்க்கும் வயதினர் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.