அசைவ விரும்பிகளே உஷார்! இப்படியுமா மரணம் வரும்? பலி ஆடால் பலியான நபர்! எமனாக மாறிய ஆட்டு கண்! ஷாக்

போபால்: அசைவ உணவு சாப்பிடுபவரா நீங்கள்?.. ஆம் என்றால் இந்த செய்தி உங்களுக்கு தான். சத்தீஸ்கரில் நேர்த்திக்கடனாக ஆடு ஒன்று பலி கொடுக்கப்பட்ட நிலையில் அந்த ஆட்டின் கண், ஆட்டை பலி கொடுத்தவரின் உயிரை விசித்திரமான முறையில் பறித்துள்ள ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.

உலகில் பிறந்த மனிதர்கள் உள்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் இறப்பு ஒன்று நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பிறந்த நாளில் இருந்து நாம் அனைவரும் மரணத்தை நோக்கியே பயணிப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

மனித இறப்புகள் பல்வேறு வழிகளில் நிகழ்கின்றன. விபத்து, உடல்நலக்குறைவு, வயது முதிர்வு உள்ளிட்டவற்றை முக்கியமாக கூறலாம். இதுதவிர சிலர் விசித்திரமான முறையில் மரணத்தை தழுவுகின்றனர். அந்த வகையில் தான் சத்தீஸ்கரில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது நேர்த்திக்கடனாக ஆடு பலியிட்டவரின் உயிரை அந்த ஆட்டின் கண்ணே பறித்த சம்பவம் நடந்துள்ளது. இது எப்படி நடந்தது? என்பது தொடர்பான விபரம் வருமாறு: சத்தீஸ்கர் மாநிலம் சுராஜ்பூர் மாவட்டம் மதன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பாகர் சாய் (வயது 50). கடவுள் நம்பிக்கை கொண்டவர். இவர் கோபா தாம் கோவிலுக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தான் கடந்த முறை கோவிலுக்கு சென்றவர் தனது விருப்பம் நிறைவேறினால் ஆடு பலியிடுவதாக நேர்த்தி கடன் செய்துள்ளார். இந்நிலையில் தான் பாகர் சாய் நினைத்த விஷயங்கள் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அவர் வேண்டி கொண்டதன்படி ஆடு பலியிட முடிவு செய்தார்.

அதன்படி பாகர் சாய் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கோபாதாம் கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் பூஜைகள் செய்து சாமிக்கு வழிபாடு நடத்தினார். அதன்பிறகு அவர் ஆடு ஒன்றை பலியிட்டார். இதையடுத்து ஆடு சமைக்கப்பட்டது. அதன்பிறகு அவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து அவர் உணவு சாப்பிட்டார்.

அப்போது கறிக்குழம்பில் கிடந்த ஆட்டின் கண்ணை எடுத்து பாகர் சாய் ருசிக்க முடிவு செய்தார். இதையடுத்து சமைக்கப்பட்ட குழம்பில் கிடந்த ஆட்டின் கண்ணை எடுத்து வாயில் போட்டு விழுங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டின் கண் அவரது தொண்டையில் சிக்கி கொண்டது. இதனால் அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் அவர் அலறி துடித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நேர்த்திக்கடன் என்ற பெயரில் பலியிடப்பட்ட ஆட்டின் கண்ணே, அவரது உயிரை பறித்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.