ஒரே நாடு ஒரே தேர்தல்.. "இப்போ நாங்க சொல்ல மாட்டோம்".. அப்புறம்தான் சொல்வோம்.. அன்புமணி ராமதாஸ்

சென்னை:
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ நடைமுறை குறித்து இப்போதைக்கு எங்களால் எதுவும் சொல்ல முடியாது என்றும், சிறிது காலம் கழித்துதான் சொல்ல முடியும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தல்களையும் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ முறையை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கமிட்டி ஒன்றையும் மத்திய அரசு அமைத்துள்ளது.

இதனிடையே, இந்த ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு இந்தியாவில் உள்ள பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் இதுதொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

இந்தியா என்பது மிகப்பெரிய நாடு. இப்படியொரு பெரிய நாட்டில் ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்தும் போது சில நடைமுறை சிக்கல்கள் வரும். அதாவது, நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் என்ன ஆகும்? உள்ளாட்சித் தேர்தலை எடுத்துக் கொண்டால் 4 விதமான வாக்குப்பதிவுகள் நடைபெற வேண்டும். அதை தவிர, சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு இரண்டு வாக்குகள் என மொத்தம் 6 வாக்குப்பதிவுகள் நடைபெற வேண்டும்.

அப்படியென்றால் 6 வெவ்வேறு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்க வேண்டும். அதற்கு அதிக அளவிலான இயந்திரங்கள் தேவைப்படும். ஆனால், நமது தேர்தல் ஆணையத்திடம் தற்போது 12 லட்சம் வாக்கு இயந்திரங்கள் தான் இருக்கின்றன. ஒரே சமயத்தில் தேர்தலை நடத்த கிட்டத்தட்ட 25 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேண்டும். இப்படி எல்லா அம்சங்களை பற்றியும் ஆய்வு நடத்த வேண்டும். இப்பொழுதான் ஆய்வுக் கமிட்டியை அமைத்திருக்கிறார்கள். இதில் அரசு என்ன பரிந்துரை செய்கிறது என்பதை பார்த்துவிட்டு தான் இதில் நாங்கள் கருத்து கூற முடியும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.