புதுடெல்லி: இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி, பொதுமக்களிடம் மோசடி செய்யும்சம்பவங்களும் புதுப்புது வழிமுறைகளில் அரங்கேறி வருகின்றன. இந்த மோசடிகளுக்கு சிம் கார்டு முக்கிய ஆதாரமாக உள்ளது. எனவே, சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்தவும், போலி சிம் கார்டுகளை கண்டறியவும் மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து தீர்க்கமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதன்படிபுதிய சிம் கார்டுகளை வாங்கும் விதிமுறைகளை மத்திய அரசு வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் கடுமையாக்கியுள்ளது. அதன்படி சிம் கார்டுகள் வாங்குவது மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக புதிய விதிமுறைகள் அமலாக உள்ளன.
புதிய தொலைத்தொடர்பு மசோதாவில் கூறப்பட்டுள்ளபடி, போலி சிம் கார்டுகளை வாங்கும் நபர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அதுபோன்ற குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம் கார்டு வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பயோமெட்ரிக் விவரங்கள் சரிபார்ப்பது கட்டாயமாக்கப்படும். இதன் மூலம், போலி சிம் கார்டுகளின் புழக்கத்தை வெகுவாக குறைக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
மேலும், அங்கீகரிக்கப்படாத சிம்கார்டு பரிவர்த்தனைகளின் அபாயத்தை குறைக்க டிஜிட்டல் நோ யுவர்கஸ்டமர் (கேஒய்சி) செயல்முறை அறிமுகமாக உள்ளது. சிம் கார்டுகளின் மொத்த விநியோகம் இனி வரும் ஆண்டு முதல் அனுமதிக்கப்படாது. மேலும், வணிக நோக்கங்கள் கொண்டவர்கள் மட்டுமே இனி மொத்த சிம் கார்டு பெறுவதற்கு பொறுப்பாவார்கள். வரும் ஜனவரி 1 முதல் தொலைத்தொடர்பு விநியோகஸ்தர்கள், பாயின்ட் ஆஃப் சேல் ஏஜென்டுகள், சிம் விநியோகஸ்தர்கள் பதிவு செய்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.