கூகுள் மேப்பில் வந்தாச்சு புதிய AI – இனி முட்டுச் சந்துக்கெல்லாம் போகமாட்டீங்க..!

சாட்ஜிபிடி வருகைக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அசந்துபோன கூகுள் உடனடியாக கூகுள் பார்டு ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவை கொண்டு வந்தது. அதோடு மட்டும் நிற்கவில்லை. அடுத்தாக கூகுள் ஜெமினி, ஜெனிமி புரோ என்றெல்லாம் அடுத்தடுத்து அப்டேட்டுகளை இறக்கிக் கொண்டே இருக்கிறது. அனைத்து வகையிலான தன்னுடைய தொழில்நுட்பங்களில் இந்த ஏஐ அம்சங்களை சேர்த்து அப்டேட்டுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அண்மையில் கூகுள் பார்டில் புகைப்படங்களை உருவாக்கும் அம்சத்தை கொண்டு வந்த கூகுள், இப்போது கூகுள் மேப்பிலும் புதிய ஏஐ அம்சங்களை சேர்த்திருக்கிறது.

இது கூகுள் மேப்பில் யூசர்களுக்கு தேவையான முடிவுகளை அவர்களின் ரசனைக்கு ஏற்ப கொடுக்கும். உதாரணத்துக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அங்கிருந்து கூகுள் மேப்பில் பாரம்பரியமான கடைகளை காட்டவும் என கேட்டால் உணவு, துணி, செருப்பு என என்னென்ன கடைகள் பாரம்பரியமாக இருக்கிறதோ அதனையெல்லாம் பிரத்யேகமாக காட்டும். அந்த கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் கொடுத்திருக்கும் ரேட்டிங், விமர்சனம் அடிப்படையில் இந்த தேர்வுகளை கூகுள் மேப் காட்டும். அதுதவிர கூகுள் மேப்பில் இல்லாத வழிகளையும் வாடிக்கையாளர்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளும் அம்சமும் இதில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, வரைபட வழிகள் இல்லாமல் புதிய வழிகளை கூகுள் மேப்பில் சேர்த்துக் கொள்ள முடியும் என்பதால் வாடிக்கையாளர்கள் இனி முட்டுச் சந்தில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், இப்போது அமெரிக்காவில் மட்டுமே இந்த அம்சத்தை கூகுள் மேப்பில் அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். அங்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் கருத்துகளின் அடிப்படையில் மேம்பாடுகள் செய்யப்பட்டு அடுத்தடுத்த உலக நாடுகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறது. 

வாடிக்கையாளர்கள் மேப்பில் தேடும் விஷயங்களை பிரத்யேக தகவல்களுடன் கொடுத்து வாடிக்கையாளரையே அசத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கூகுள் இத்தகைய அப்டேட்டுகளை கொண்டு வர இருக்கிறது. அதனால் வரும் காலத்தில் கூகுள் மேப்பில் கவர்ச்சிகரமான அம்சங்கள் வர இருக்கிறது என்பது மட்டும் இதன் மூலம் உறுதியாகி இருக்கிறது. வாடிக்கையாளர்களின் விருப்பம் அறிந்து இந்த புதிய கூகுள் ஏஐ அம்சங்கள் கூகுள் மேப்பில் செயல்படும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.