டெல்லி தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பறித்த வழக்கு உட்பட ஏராளமான மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் பாலிவுட் நடிகைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தார். டெல்லி திகார் சிறையில் இருந்து கொண்டே, தான் வெளியில் இருந்து பேசுவது போல் போனில் பேசி நட்பை ஏற்படுத்தினார். அதோடு அவர்களை திகார் சிறைக்கு வரவழைத்தும், கூரியர் மூலமும் பரிசுப்பொருட்களை அள்ளி வழங்கினார். இதில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகேஷுடன் மிகவும் நெருக்கமாக பழகினார். இதனால் ஜாக்குலினுக்கு சுகேஷ் கோடிக்கணக்கில் பணமும், ஏராளமான பரிசுப்பொருட்களும் கொடுத்தார். இதனால் சுகேஷ் சிறையில் இருந்து பரோலில் வந்த போது அவரை சென்னையில் சென்று ஜாக்குலின் சந்தித்து பேசிவிட்டு வந்தார்.
ஆனால் இது தொடர்பாக அமலாக்கப்பிரிவும், சி.பி.ஐ.யும், டெல்லி போலீஸாரும் விசாரிக்க ஆரம்பித்தபோது ஜாக்குலின் தனக்கு சுகேஷுடன் இருந்த உறவை மறுத்தார். இவ்வழக்கில் ஜாக்குலினை அமலாக்கப்பிரிவு குற்றவாளியாக சேர்த்து இருக்கிறது. இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கோரி ஜாக்குலின் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சுகேஷ் இவ்வழக்கில் தன்னை சிக்கவைத்து விட்டதாகவும், சுகேஷ் செய்த குற்றத்தில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து சுகேஷும் உண்மையை சொல்லவேண்டி வரும் என்று மிரட்டி இருந்தார்.
இந்நிலையில் ஜாக்குலின் டெல்லி போலீஸில் கொடுத்துள்ள புதிய புகாரில், சுகேஷ் சிறையில் இருந்து கொண்டு தன்னை துன்புறுத்துவதாகவும், மிரட்டுவதாகவும் டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார். மன அழுத்தத்துடன் இக்கடிதம் எழுதுவதாக அதில் குறிப்பிட்டுள்ளார். “தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால் போலீஸார் உடனே இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறையில் இருக்கும் சுகேஷ் என்ற நபர் வெளிப்படையாக மிரட்டல் விடுக்கிறார். சாட்சி என்ற முறையில் எனக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக சுகேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்படவேண்டும்.
சிறையில் இருக்கும் ஒருவர் எப்படி வெளியில் தொடர்பு கொள்கிறார் என்பது குறித்து கமிஷனர் வெளிப்படையாக விசாரிக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாக்குலின் தாக்கல் செய்த மனுவில், தனக்கு சுகேஷ் கடிதம் மற்றும் மெசேஜ் அனுப்ப கோர்ட் தடைவிதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY