திருச்சி – சென்னை தினசரி விமான சேவை 6 ஆக அதிகரிப்பு 

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 2024 மார்ச் மாதத்துக்கு பிறகு உள்நாட்டு மற்றும் விமான சேவையை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது, இயக்கப்பட்டு வரும் திருச்சி – சென்னை, திருச்சி – பெங்களூரு இடையிலான சேவையில் ஒரு சேவை கூடுதலாக அளிக்கப்படவுள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, வெளிநாட்டு விமான சேவையாக சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், சார்ஜா, கொழும்பு, குவைத், தோகா, மஸ்கட் உள்ளிட்ட 10 நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு சேவையாக தினசரி சென்னைக்கு-5 சேவையும், பெங்களூரூக்கு 3 சேவையும், ஹைதராபாத், மும்பைக்கு தலா ஒரு சேவையும் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜன.2-ம் தேதி திறக்கப்பட்ட புதிய முனையம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை அதிகரிக்கும். தற்போது, கையாளப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் முறையே 2038, 930 இரு மடங்காக அதிகரிக்கும் என விமானநிலைய அதிகாரிகள் கூறிவந்தனர். ஆனால் பயணிகளிடையே போதிய வரவேற்பை பெற்றிருந்த தினசரி ஒரு சேவையாக இருந்த திருச்சி- மும்பை சேவையானது வாரத்துக்கு 3 ஆக குறைக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி தினசரி இரவு 9.20 மணிக்கு இயக்கப்பட்ட திருச்சி- மும்பை விமான சேவை பகல் நேரத்தில் மதியம் 1.05 மணிக்கு மும்பை புறப்படும் வகையில் அட்டவணை மாற்றப்பட்டது. இதற்கு மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பயணிகள் நெரிசலே காரணம் எனவும், இவை, விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் அறிவுறுத்தலின் பேரில் தற்காலிக நடவடிக்கை என விமானநிலைய அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், திருச்சி – சென்னை, திருச்சி – பெங்களூரு இடையிலான விமான சேவை தினசரி கூடுதலாக ஒரு சேவையை அளிக்க இண்டிகோ விமான நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி, வரும் மார்ச் 31-ம் தேதி முதல் இந்த இரு உள்நாட்டு விமான சேவையையும் இயக்குவதற்கான கால அட்டவணையை விமானநிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி சர்வதேச விமானநிலைய அதிகாரி ஒருவர் இந்து தமிழ் நாளிதழுக்காக கூறியது: “திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து 2024 மார்ச் மாதத்துக்கு பிறகு உள்நாட்டு மற்றும் விமான சேவையை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது, இயக்கப்பட்டு வரும் திருச்சி-சென்னை, திருச்சி-பெங்களூரு இடையிலான சேவையில் ஒரு சேவை கூடுதலாக அளிக்கப்படவுள்ளது.

அதன்படி, திருச்சி – பெங்களூரு இடையே காலை 7.40, மாலை 3.40, 6.55, இரவு 8.45-க்கும், திருச்சி-சென்னை இடையே காலை 7.55, 11,00, மதியம் 12.30 , 2.30, மாலை 6.25, இரவு 8.25-க்கும் என இயக்கப்படவுள்ளது. எனவே வரும் காலங்களில் திருச்சி விமான நிலையத்தில் கையாளப்படும் உள்நாட்டு பயணிகள் அதிகரிக்க கூடும். இதன் தொடர்ச்சியாக தினசரி திருச்சி -சென்னை 6 ஆகவும் , திருச்சி -பெங்களூரு 4 ஆகவும் அதிகரிக்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.