புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
தேர்தல் பத்திர விவரங்கள் அனைத்தையும் வெளியிட உத்தரவிட்டும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஏன் முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கவில்லை. தேர்தல் பத்திரங்களை வாங்கியது யார்? எந்த தேதியில் வாங்கினார்கள்? எவ்வளவு தொகை கொடுத்து வாங்கினார்கள்? எந்த அரசியல் கட்சி எந்த தேதியில் குறிப்பிட்ட தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றிக் கொண்டது என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட மிக தெளிவான உத்தரவை பிறப்பித்திருந்தோம்.
இருந்த போதிலும், தேர்தல் பத்திரத்தின் எண்களை ஏன் எஸ்பிஐ தரப்பு வழங்கவில்லை. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி தரப்பில் விளக்கம் அளிக்க வழக்கறிஞர்கள் ஆஜராகி இருக்க வேண்டும். இந்த விசாரணையின்போது எஸ்பிஐ தரப்பில் யாரும் இல்லாதது கடும் கண்டனத்துகுரியது.
தேர்தல் பத்திரத்தின் எண்களைக் கொண்டுதான் நன்கொடையாளர்களுக்கும், அரசியல் கட்சிக்கும் இடையிலான தொடர்பை கண்டறிய முடியும். அதன்பிறகுதான் தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக நாங்கள் பிறப்பித்த உத்தரவு முழுமை அடையும். எனவே, தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரத்தினையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும்.
மேலும், இந்த விவரங்களை ஏன் முன்பே தரவில்லை என்பதற்கான காரணங்களையும் எஸ்பிஐ வங்கி வரும் திங்கள்கிழமைக்குள் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர்பான அடுத்த கட்ட விசாரணை மார்ச் 18-ம்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் திட்டம் 2018-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்குவதில் வெளிப்படைத் தன்மை இல்லாததால் இதனை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திர விற்பனை சட்டவிரோதம் என்று கூறி அந்த நடைமுறையை ரத்து செய்தது.
மேலும், தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உண்மையான ஆவணங்களை முழுமையாக நகல் எடுத்துக் கொண்டு சனிக்கிழமை (இன்று) மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையத்திடம் திருப்பி வழங்கி விட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.