10-day bad to open sand quarry, lorry owner warns government | மணல் குவாரியை திறக்க 10 நாள் கெடு அரசுக்கு லாரி உரிமையாளர் எச்சரிக்கை

சேலம், சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர் சங்க செயலர் கண்ணையன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்காவிட்டால் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தோம். அதன் எதிரொலியாக சேலம் கனிம வள உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் நடத்திய பேச்சில், செம்மண், மொரம்பு மண் எடுத்துச்செல்ல விண்ணப்பித்தால், ‘பர்மிட்’ தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. அத்துடன் எம்.சாண்ட் மணல் விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதிலுள்ள நடைமுறை சிக்கல்களை களைந்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதால், தேர்தல் புறக்கணிப்பை தற்காலிகமாக, 10 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளோம். அதேநேரம் மணல் குவாரிகளை அரசு நினைத்தால் மட்டுமே திறக்க முடியும். ஏற்கனவே மணல் குவாரிகள் மூடப்பட்டது தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது மூடிய மணல் குவாரிகளை திறக்க, மற்றொரு வழக்கை தொடர சங்கம் சார்பில் முடிவு செய்துள்ளோம்.
மணல் குவாரியை திறக்க, 6 மாதங்களாக தொடர்ந்து போராடுவதால் தேர்தல் நடத்தை விதிகள், எங்களை கட்டுப்படுத்தாது. போர்க்கால அடிப்படையில் மணல் குவாரியை அரசே திறக்க வேண்டும். இல்லையெனில் திட்டமிட்டபடி தமிழகம் முழுதும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.