சுட்டிக்குழந்தை சாம் கரனின் வெறியாட்டம்… டெல்லியின் தோல்விக்கு என்ன காரணம்?

IPL 2024 PBKS vs DC Highlights: 17ஆவது ஐபிஎல் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கியது. முதல் லீக் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி முன்னணியை பெற்றது. அந்த வகையில், புதிதாக மொஹாலியில் கட்டப்பட்ட முல்லன்பூர் மைதானத்தில் இரண்டாவது லீக் போட்டி நடைபெற்றது. 

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் நல்ல தொடக்கத்தை அளித்தாலும் மார்ஷ் 20 ரன்களிலும், வார்னர் 29 ரன்களிலும் அவுட்டாக ரன்ரேட் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. ஷாய் ஹோப் ஒரு பக்கத்தில் நம்பிக்கை அளித்தார். அவரும் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஹர்ஷல் படேல் பரிதாபம் 

14 மாதங்களுக்கு பின் களம் கண்ட ரிஷப் பண்ட் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அவரும் நிதானமாக 18 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து அக்சர் படேல் நல்ல கேமியோ இன்னிங்ஸ் விளையாடி அவுட்டான நிலையில், ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் Impact Sub ஆக களமிறங்கிய இஷான் பொரேல் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை குவித்து அசத்தினார். 

இதனால், டெல்லி அணி 175 ரன்களை பஞ்சாப் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. ஷிகர் தவாண், பேர்ஸ்டோவ் ஜோடியும் அதிரடியாக தனது இன்னிங்ஸை தொடங்கியது. குறிப்பாக கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் 17 ரன்களையும், இஷாந்த் சர்மா வீசிய இரண்டாவது ஓவரில் 8 ரன்களையும், கலீல் அகமது வீசிய மூன்றாவது ஓவரில் 12 ரன்கள் என மொத்தம் மூன்று ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்களை சேர்த்தது. 

ஆட்ட நாயகன் சாம் கரன்

ஆனால், இஷாந்த் சர்மா வீசிய நான்காவது ஓவரில் ஷிகர் தவாண் போல்டாகி ஆட்டமிழந்த நிலையில், அதே ஓவரில் பேர்ஸ்டோவும் இஷாந்த் சர்மாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து, ஒருபக்கம் சாம் கரன் நிலையாய் நின்றார். பிரப்சிம்ரன் சிங் 22 ரன்களிலும், ஜித்தேஷ் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். குறிப்பாக மிடில் ஆர்டரில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஜோடி சிறப்பாக பந்துவீசியது. இதனால் கடைசி நேரத்தில் சற்று பரபரப்பு நிலவிய நிலையில், அதனை சாம் கரன் – லிவிங்ஸ்டன் ஜோடி தகர்த்தெறிந்தது. 

கலீல் அகமது வீசிய 19ஆவது ஓவரில் சாம் கரன், ஷசாங்க் சிங் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், லிவிங்ஸ்டன் கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். இதன்மூலம், பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2017ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் கிங்ஸ் அணி அதன் முதல் போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்ற வந்துள்ளது. 2020ஆம் ஆண்டில் மட்டும் போட்டி சமனில் முடிந்து, சூப்பர் ஓவரில் தோல்வியைடந்தது. சாம் கரன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

டெல்லி அணியின் தோல்விக்கு காரணம்?

இதற்கிடையில் இஷாந்த் சர்மாவுக்கு ஆட்டத்தின் 5ஆவது ஓவரின்போது காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் களத்தில் இருந்து திரும்பினார். இஷாந்த் சர்மா 2 ஓவர்களை மட்டுமே வீசியிருந்ததால் அவரின் டெத் ஓவரை போட வெறும் யாரும் டெல்லி அணியில் இல்லை. எனவே, பதில் இளம் வீரர் சுமித் குமார் பந்துவீசி 8 பந்துகளில் 19 ரன்களை கொடுத்தார். இஷாந்த் சர்மா காயம் டெல்லி அணியின் வெற்றியை பறித்துவிட்டது எனலாம்.

குறிப்பாக, மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை எடுத்து 20 ரன்களையும், அக்சர் படேல் 4 ஓவர்களில் விக்கெட் ஏதும் இன்றி 25 ரன்களையும் கொடுத்தனர். அதாவது, 8 ஓவர்களை வீசி 45 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் இந்த சுழல் ஜோடி வீழ்த்தியிருந்தது. இஷாந்த் சர்மா 2 ஓவர்களில் 16 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். 

ஒருவேளை இஷாந்த் சர்மா இருந்திருந்தால் நிச்சயம் பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசி கட்ட ஓவர்களில் அவ்வளவு எளிதாக ரன்களை குவித்திருக்க இயலாது எனலாம். இதையேதான் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.