கொல்கத்தா: நாடாளுமன்றத்தில் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக டிஎம்சி முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது.
மஹுவா மொய்த்ராவுடன் தொடர்புடைய கொல்கத்தாவில் உள்ள வேறு இடங்களிலும் சிபிஐ சோதனை நடத்தியது. லோக்பால் ஆணைய உத்தரவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்கு வங்கம் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவாமொய்த்ரா. இவர் அதானி குழுமம் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் மக்களவையில் 50 கேள்விகள் எழுப்பியுள்ளார். இத்தகைய கேள்விகளை எழுப்ப ரூ.2 கோடி வரை அவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிரா நந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்துபாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். இதுதொடர்பான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணையில் மஹுவா மொய்த்ரா கடந்த டிசம்பரில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
லோக்பால் பிரிவு 20(3)(ஏ)-ன் கீழ் இது தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளை விசாரித்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு லோக்பால் ஆணையம் கடந்த 15-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும்அவருடன் தொடர்புடைய பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இதனிடையில், லஞ்சம் வாங்கியகுற்றச்சாட்டை மறுத்த மஹுவா மொய்த்ரா தனது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்.
மேலும், மக்களவைத் தேர்தலில் தனது தொகுதியிலேயே மொய்த்ரா மீண்டும் போட்டியிட கட்சித் தலைவரும் மேற்கு வங்கமுதல்வருமான மம்தா வாய்ப்பளித்துள்ளார்.