ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல் @ ராமநாதபுரம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினமே மதுரை மாவட்டம் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், நேற்று ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே தெற்குகாட்டூரைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் என்பவரும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வாகைக்குளத்தைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் என்பவரும், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் என்பவரும் மனுதாக்கல் செய்தனர்.நேற்று வரை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஓ.பன்னீர்செல்வம் பெயருடைய 5 பேர் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அடுத்தடுத்து ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது தமிழகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஒரே பெயர், இன்ஷியலில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள 5 பேரும் சுயேட்சைகள். இவர்களுக்கு சுயேட்சை சின்னங்களே ஒதுக்கப்படும்.

வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லும்போது புதிய சின்னம் என்பதால் எந்த வேட்பாளருக்கு எந்தச் சின்னம் என்பது நினைவில் இல்லாமல் போய்விடும். இது வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திவிடும். இந்த வேட்பாளர்கள் 5 பேரின் பெயர்கள் வரிசையாக இடம்பெற்றிருக்கும். சின்னம் மட்டுமே வேறு வேறாக இருக்கும். பெயரைப் பார்த்தால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படும். சின்னத்தை மட்டுமே அடையாளமாகக் கொண்டு வாக்காளர்களால் வாக்களிக்க முடியும். மொத்தத்தில் வாக்காளர்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு சுயேட்சை சின்னமான வாளி, பலாப்பழம், திராட்சைப்பழம் ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்குமாறு தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், தற்போது வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள மற்ற 4 வேட்பாளர்களுக்கும் தங்களுக்கும் இதே சின்னங்களை ஒதுக்க வேண்டும் என தேர்தல் அலுவலரிடம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.