ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு அதை உறுதி செய்தது. இந்த இறுதி தீர்ப்பு வருவதற்குள் ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அவரது பெயர் தீர்ப்பில் இருந்து கைவிடப்பட்டது. சசிகலா உள்பட மற்ற 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்தனர்.

இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜெயலலிதாவின் தங்க நகைகள் மற்றும் பொருட்களை தமிழக அரசிடம் கடந்த மாதம் (பிப்ரவரி) 6, 7-ந் தேதிகளில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதற்கிடையே ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கோரி ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை அந்த சிறப்பு கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை விதித்து நீதிபதி முகமது நவாஸ் உத்தரவிட்டார்.

இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி கர்நாடக அரசுக்கு நீதிபதி நோட்டீஸ் அனுப்பினார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி முகமது நவாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு தரப்பில் ஜெ.தீபாவின் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற ஏப்ரல் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதுவரை ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.