“சீனப் பட்டாசுகளை பாஜக அரசால் தடுக்க முடியவில்லை” – முதல்வர் ஸ்டாலின் @ விருதுநகர் 

விருதுநகர்: “சட்டவிரோதமாகச் சீனப் பட்டாசுகள் இன்னும் இறக்குமதி செய்யப்படுகிறது. சீனப் பட்டாசுகள் பல்வேறு மாநிலங்களில் குறைந்த விலையில் கிடைத்தது. டெல்லியிலும் – மும்பையிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சீனப்பட்டாசுகள் கைப்பற்றப்பட்டது. சீனப் பட்டாசுகளை பாஜக அரசால் முழுமையாக தடுக்க முடியவில்லை. இதனால், சிவகாசியில் 1000 கோடி ரூபாய் அளவுக்குப் பட்டாசு தயாரிப்பு சரிவைச் சந்தித்தது. இப்படி தொழில் நலிவடைந்து இருந்தபோது, மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஆடம்பரப் பொருள்கள் பட்டியலில் பட்டாசையும் சேர்த்து 28 விழுக்காடு வரி போட்ட கட்சிதான் பாஜக” என்று விருதுநகரில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார், விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு வாக்கு கேட்டு பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசுகையில், “திமுகவின் அடிப்படைக் கொள்கையே சமூகநீதிதான். திராவிட இயக்கம் உருவானதே அனைத்துச் சமூகங்களுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்றுதான். இன்றைக்குத் தமிழகத்தில் அனைத்து மக்களும் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று, முன்னேறி இருக்கிறார்கள் என்றால், 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட வகுப்புவாரி உரிமைச் சட்டம்தான் காரணம். இதை அடுத்தடுத்து வந்த கட்சிகளும் அமல்படுத்தினார்கள்.

காமராஜரின் ஆட்சி, சமூகநீதியை நிலைநாட்டும் ஆட்சியாக இருந்தது. சமூகநீதிக்கு ஆபத்து வந்தபோது, பெரியாரும் – அண்ணாவும் போராட்டம் நடத்தினார்கள். இதை, அன்றைய பிரதமர் நேருவுக்கு எடுத்துக் கூறி, முதல் அரசியல் சட்டத் திருத்தம் உருவாகக் காரணமாக இருந்தவர் காமராஜர். சட்டமாக உருவாக்கிக் கொடுத்தவர் அம்பேத்கர். இப்படி பெருந்தலைவர்களால் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு – சமூகநீதிக்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் கட்சிதான் பாஜக.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து என்ன செய்கிறார்கள்? மத்திய அரசு பணிகளில் மண்டல் பரிந்துரை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது இல்லை. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும் வழங்குவது இல்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் பேசும்போது புள்ளிவிவரத்துடன் கூறினார். மத்திய அரசின் மிக உயர் பொறுப்பில் இருக்கும், அதாவது நம் நாட்டையே நிர்வகிக்கும் 90 செயலாளர்களில் வெறும் 3 பேர்தான், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் குறைவுதான்.

இது நாட்டிலேயே பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா? ஒடுக்கப்பட்ட மக்கள் படிப்பதை, பெரிய பொறுப்புகளுக்குச் செல்வதை, காலம் காலமாகத் தடுத்த இவர்கள், இப்போதும் தங்கள் கையில் ஆட்சியை வைத்திருப்பதால் தடுக்கிறார்கள். அதுக்கு என்னென்ன புதிய சட்டங்கள் வருகிறது? குலக்கல்வியை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கை. ஏழை – நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வு. மத்திய பணிக்கான தேர்வுகளில் தமிழைப் புறக்கணித்து, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு செய்து, நம்முடைய பிள்ளைகளின் வேலைகளைப் பறிக்கிறார்கள். பொருளாதார அடிப்படையில், இடஒதுக்கீடு என்று ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் ஒடுக்கப் பார்க்கிறார்கள்.

இப்படி அநியாயமாக நம்முடைய உரிமைகளை பறிக்கும் கூட்டம்தான் பாஜக. அதனால் தான் கூறுகிறோம். பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேறுவதை பாஜக எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளாது. இதனால்தான் மத்திய அளவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன், சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கேட்கிறோம், போராடுகிறோம். அதையாவது செய்கிறார்களா? அதையும் மறுக்கிறார்கள். இதனால்தான் கூறுகிறோம், நாட்டின் சிறுபான்மையினருக்கும் மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரி பாஜகதான் என்று மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறேன். இதுமட்டுமா, வரலாறு காணாத ஊழல்களைச் செய்துவிட்டு, அதை மூடி மறைக்க ED,IT,CBI போன்ற அமைப்புகளைக் கூட்டணியாகச் சேர்த்துக் கொண்டார்கள். இப்போது பாஜகவை ஆட்டம் காண வைக்கும் ’இமாலய ஊழலான’ தேர்தல் பத்திர ஊழல் வெளியாகி இருக்கிறது.

இன்றைக்குக் காலையில் செய்திகள் வந்ததே, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில், இந்தத் தேர்தல் பத்திர ஊழல் என்பது, இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் என்று கூறியுள்ளார். ஏற்கெனவே அவர், பாஜக ஆட்சி நம்முடைய நாட்டை எப்படியெல்லாம் சீரழித்திருக்கிறார் என்று – ”புதிய இந்தியா எனும் கோணல் மரம்” என்ற புத்தகத்தில் கவலையுடன் எழுதியிருக்கிறார். ”புதிய இந்தியா பிறந்துவிட்டது” என்று பாஜக கட்டமைக்கும் பிம்பம் எப்படி மோசமானது என்று நாளுக்கு நாள் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது. நாட்டின் தன்னாட்சி அமைப்புகளைக்கூட, பாஜகவின் ஆதரவு கட்சிகள்போல் செயல்பட வைத்து, அரசியல் சட்டப்படிதான் ஆட்சி நடக்கின்றதா என்ற சந்தேகத்தை பாஜக ஆட்சி உருவாக்கிவிட்டார்கள்.

இது பற்றி, நேற்று ஆங்கில இந்து நாளேடு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது… அதில், ”ED,IT, ரெய்டுகள் நடந்த நிறுவனங்கள் வாங்கிய, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை, ஆளும் பாஜக பணமாக்கியிருக்கிறது” என்று எழுதியிருக்கிறார்கள். பாஜக ஆட்சியால் இந்திய நாட்டு மக்களுக்கு நடந்த நன்மை என்று ஒன்றாவது இருக்கிறதா?
சமூகநீதியை, சகோதரத்துவத்தை, சமதர்மத்தை நிலைநாட்டவேண்டும் என்றால் இண்டியா கூட்டணி ஆட்சி இந்தியாவில் உருவாகியே ஆக வேண்டும். தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும், தமிழுக்கும் துரோகம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், வாக்கு கேட்டு மட்டும் தமிழகத்துக்கு வருகிறார். பிரதமர் ஆவதற்கு முன்னால் தமிழகத்துக்கு வாக்கு கேட்டு வந்தபோது பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தாரே? அதில் எதையாவது செய்தாரா? இல்லையே.

2014-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி ராமநாதபுரத்தில் பேசிய மோடி, “சீனாவில் இருந்து பட்டாசுகள் வருவதால் குட்டி ஜப்பானான சிவகாசி பட்டாசுத் தொழில் நலிவடைந்திருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால், பட்டாசுத் தொழிற்சாலைகளையும், தொழிலாளர்களையும் பாதுகாப்போம்” என்று பேசினாரே, இதற்காக அவர் செயல்படுத்திக் கொடுத்த திட்டங்கள் என்ன? சட்டவிரோதமாகச் சீனப்பட்டாசுகள் இன்னும் இறக்குமதி செய்யப்படுகிறது. சீனப்பட்டாசுகள் பல்வேறு மாநிலங்களில் குறைந்த விலையில் கிடைத்தது.

டெல்லியிலும் – மும்பையிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சீனப்பட்டாசுகள் கைப்பற்றப்பட்டது. சீனப் பட்டாசுகளை பாஜக. அரசால் முழுமையாக தடுக்க முடியவில்லை. இதனால், சிவகாசியில் 1000 கோடி ரூபாய் அளவுக்குப் பட்டாசு தயாரிப்பு சரிவைச் சந்தித்தது. இப்படி தொழில் நலிவடைந்து இருந்தபோது, மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஆடம்பரப் பொருள்கள் பட்டியலில் பட்டாசையும் சேர்த்து 28 விழுக்காடு வரி போட்ட கட்சிதான் பாஜக.

12 விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர்களே தொடர் போராட்டம் நடத்தினார்கள். பட்டாசு வெடிபொருள் தயாரிப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது மத்திய அரசு முறையாக வாதங்களை வைக்கவில்லை. பசுமைப் பட்டாசுகளைத் தயார் செய்யுங்கள் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பசுமைப் பட்டாசு என்றால் என்ன என்று மத்திய பாஜக அரசு வரையறை செய்யவே இல்லை.

பசுமைப் பட்டாசு தயாரிப்பதற்கு ஆலைகள் காத்திருக்கிறது. ஆனால், பாஜக அரசு எந்த உதவியும் செய்யவில்லை. கரோனாவுக்குப் பிறகு பட்டாசுத் தொழில் சரிந்தது. அதை மீட்டெடுக்க எந்த முயற்சியையும் பாஜக அரசு செய்யவில்லை. இப்படி பத்தாண்டுகளாகப் பட்டாசுத் தொழிலை நாசம் செய்த அரசுதான் பாஜக அரசு. இப்படி மக்களை பாதிக்கும் எல்லாவற்றிலும் அலட்சியமாகவும், ஆணவமாகவும் இருக்கும் கட்சிதான் பாஜக.

பத்தாண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த பாஜக அரசானது, நாட்டையே படுகுழியில் தள்ளிவிட்டது. நாட்டை உடனடியாக மீட்டாக வேண்டும். அப்படி மீட்பதற்கான மிகப்பெரிய வாய்ப்புதான் இந்தத் தேர்தல். அதனால்தான் இந்தியா முழுமைக்குமான ஜனநாயக சக்திகள் இண்டியா கூட்டணியை அமைத்திருக்கிறோம். இந்தியா கூட்டணியை பார்த்து பயந்து, பிரதமர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார்.

தேர்தல் வந்துவிட்டால், கூடவே மக்கள் மேல் அவருக்கு கரிசனமும் பொங்கி வரும். திடீரென்று விலையெல்லாம் குறைப்பார். இப்போதுகூட சிலிண்டர் விலையை, பெட்ரோல் விலையை, டீசல் விலையைக் குறைத்திருக்கிறார். விலையை ஏற்றியது யார்? மோடி பிரதமரான நாள் முதல் விலை ஏறிக்கொண்டே இருந்தது. ஆனால், விலையேற்றத்துக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் இருப்பார். தேர்தல் நேரம் வந்துவிட்டால் மட்டும் விலையைக் குறைக்கும் பவர் வந்துவிடும்.

சமீபத்தில், மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் என்று உடனடியாக சிலிண்டர் விலையைக் குறைத்தார். வருடா வருடம்தான் மகளிர் தினம் வருகிறது. அப்போதெல்லாம் இதுபோன்று குறைத்தாரா? இல்லையே. அப்போதெல்லாம் இந்திய நாட்டு மகளிரும், இந்தியக் குடும்பங்களும் படும் கஷ்டம் அவர் கண்ணுக்குத் தெரியவில்லையா? இப்போது தேர்தல் வந்ததும் குறைக்கிறார். என்னவொரு கருணை உள்ளம் அவருக்கு. தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான உள்ளம்.

மோடி பிரதமராகப் பொறுப்பேற்பதற்கு, 2013-க்கு முன்னால், சிலிண்டர் விலை எவ்வளவு? 410 ரூபாய். பத்து ஆண்டுகள் கழித்து, 2023-ல் சிலிண்டர் விலை எவ்வளவு? 1103 ரூபாய். ஐந்து மாநில தேர்தல் வந்தது, கூடவே மோடிக்கு இரக்கமும் வந்தது. சிலிண்டர் விலை குறைந்தது. இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது, அதனால் 100 ரூபாய் குறைத்திருக்கிறார்.

தேர்தலுக்கு தேர்தல் மட்டும் விலை குறைப்பு செய்வது ’பச்சோந்தி அரசியல்’ இல்லையா? 410 ரூபாய் இருந்த சிலிண்டரை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்த்தியதுதான் உங்களின் சாதனை. தேர்தல் வந்ததால் சிலிண்டர் விலையை மட்டுமல்ல, பெட்ரோல் – டீசல் விலையையும் குறைக்கிறார். விலைக்குறைப்பு என்பது மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி நடத்தும் நாடகம். அவரது நாடகங்களை மக்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பிரமதமர் மோடியை நீங்கள் நம்புகிறீர்களா? மக்கள் யாருமே அவரை நம்பவில்லை. உடனே மக்களை நம்ப வைக்க இப்போது புதிய விளம்பரம் ஒன்று செய்கிறார். என்ன தெரியுமா? தாய்மார்கள் இங்கு நிறைய பேர் வந்திருக்கிறீர்கள், ஒரு மிக்சி விளம்பரம் வருமே நினைவு இருக்கிறதா? “ப்ரீத்திக்கு நான் கேரண்டி” என்று ஒரு விளம்பரம். அந்த மாதிரி இவர், “இது மோடியின் கேரண்டி” என்ற புதிய விளம்பரத்துடன் வந்திருக்கிறார். உண்மையில அவரின் வாக்குறுதிகளுக்கு, கேரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை. பிரதமராக நாட்டு மக்களுக்கு நல்லது செய்யச் சொன்னால், பத்தாண்டுகளாகச் சொன்ன எதையுமே செய்யாமல், சேல்ஸ்மேன் மாதிரி கேரண்டி என்று விளம்பரம் செய்த உங்களுக்கு வெட்கமாக இல்லை? அவரின் கேரண்டிகளின் லட்சணம் என்ன?

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடலாம் என்று சொன்னாரே? 15 லட்சம் இல்லை, 15 ஆயிரமாவது மக்களுக்கு கொடுத்தாரா? 15 ரூபாயாவது கொடுத்தாரா? அதுமாதிரியான கேரண்டியா? இல்லை, ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று சொன்னாரே, என்ன ஆனது? உலகத் தொழிலாளர் அமைப்பு நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இன்றைக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தால் 83 விழுக்காடு இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இதுதான் மோடி சொல்லும், கேரண்டியின் லட்சணம். புதிது புதிதாக வாக்குறுதி கொடுத்தால், நிறைவேற்றாத பழைய வாக்குறுதியெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று பிரதமர் மோடி தப்புக் கணக்கு போடுகிறார்.

தேர்தலுக்குத் தேர்தல் பிரதமராகிய நீங்கள் வெறும் வாயால் வடை சுடுவீர்கள் என்று மக்களுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. தமிழகத்துக்கு ஒன்றுமே செய்யாமல், பத்து ஆண்டில் ஒரு சிறப்புத் திட்டத்தைக்கூட நிறைவேற்றாமல், அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையைக்கூட கட்டத் தொடங்காமல், பேரிடர் நேரத்தில் நிதி தராமல், ஒரு இரங்கல்கூட சொல்லாமல், இப்போது தேர்தல் நேரத்தில் மட்டும் இங்கு அடிக்கடி வாக்கு கேட்டால், உங்களுக்கு ஆதரவு தர நாங்கள் ஏமாளிகளா? நாங்கள் என்ன சோற்றால் அடித்த பிண்டங்களா? என்று மக்கள் கேட்கிறார்கள். பதில் சொல்லுங்கள்.

இவர் இப்படி, வெறும் கையால் முழம் போடுகிறார் என்றால், மற்றொருவர் இருக்கிறார் பழனிசாமி. காற்றிலேயே கம்பு சுற்றுபவர் அவர். நடப்பது நாடாளுமன்றத் தேர்தல். பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது மத்திய பாஜக அரசு. மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்துக்காகப் பச்சோந்தியாக மாறி, பாஜகவுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நடகம் நடத்துகிறாரே, எங்கேயாவது, பாஜகவையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா? பிரதமர் பற்றி மட்டுமல்ல; ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார்.

“ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?” என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது? ஆளுநரால் இந்தத் தனிப்பட்ட ஸ்டாலினுக்கோ, திமுகவுக்கோ எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருக்கும் எங்களுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு தகராறா? இல்லை, பாகப்பிரிவினை, பங்காளி சொத்து பிரச்சினையா? தமிழக மக்களுக்கு நன்மை செய்வதைத் தடுக்கிறார். தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களுக்கும், சட்டமுன்வடிவுகளுக்கும் அனுமதி அளிக்க மறுக்கிறார். இதுதான் எங்களுக்கும் அவருக்குமான பிரச்சினை.

மக்களால் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கு அனுமதி தராமல் ஆளுநர் இழுத்தடிப்பது, தமிழக சட்டமன்றத்தை இழிவுபடுத்துவது இல்லையா? முதல்வரான எனக்கு எப்படி கோபம் வருகிறதோ, அதே கோபம் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமிக்கு வர வேண்டாமா? ஆளுநர் இப்படி இழுத்தடிப்பது தவறு என்று ஆளுநரைக் கேட்டிருக்க வேண்டாமா? அப்படி கேட்க மறுக்கிறார் என்றால், ஒன்று ஆளுநரைப் பார்த்து பயப்படுகிறார் என்று அர்த்தம். இல்லை, பழனிசாமிக்குச் சொரணை இல்லை என்று அர்த்தம்.

நாங்கள் கேட்பது, ஆளுநருக்கும் உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அதிமுக ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள். அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை.

ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்துக்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். அப்படிதான் மறைந்த முதல்வர் கருணாநிதி எங்களை வழிநடத்தி இருக்கிறார். தமிழக ஆளுநராக இருந்தாலும், கேரள ஆளுநராக இருந்தாலும், மக்கள் பிரதிநிதிகளை மதிக்கவில்லை என்றால் கண்டிப்போம். உங்களை மாதிரியே எல்லாரும் சொரணை இல்லாமல் இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள்.

அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள். மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான். பொழுது விடிந்ததுமே தமிழகத்துக்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே, தமிழகத்தை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019-ல் நடந்த 21 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல், 2019-ல் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2021-ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022-ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்று 8 தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்தது. எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்த பிறகு தொடர்ச்சியாகத் தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது அதிமுக.

இதற்கெல்லாம் காரணம் பாஜகவுக்கு அடிமை சேவகம் செய்து, தமிழக உரிமைகளை மொத்தமாக தாரைவார்த்து துரோகம் செய்ததுதான். இப்படி துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழகத்தை மீட்கப் போகிறாராம்? முதலில், பாஜகவிடம் இருந்து அதிமுகவை மீட்கப் பாருங்கள். பாஜக தனியாக வந்தாலும் சரி, பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி, அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழக மக்களுக்கு இருக்கிறது” என்று முதல்வர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.