ஓட்டுக்கு பணம் வாங்கலாம் : விஜய் ஆண்டனி சர்ச்சை

தேர்தலின் போது ஓட்டுப்போட பணம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்கிற நிலையில் நடிகரும், இசை அமைப்பாளரும், தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கலாம் என்ற சர்ச்சை கருத்தை கூறியிருக்கிறார்.

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ள படம் 'ரோமியோ'. வரும் 11ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் புரமோசன் நிகழ்வு நடந்தது.

இதைத்தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி பேசியதாவது: இந்த படம் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாகி உள்ளது. குறிப்பாக மனைவிகள் பார்க்க வேண்டிய படம். ஒவ்வொரு கணவனும் மனைவியை இந்த படத்திற்கு அழைத்து வர வேண்டும். திருமணத்திற்குப் பிறகு கணவன் – மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் படம் பேசியிருக்கிறது.

படத்தின் நாயகி முதலிரவு காட்சியில் மது அருந்துவது போன்ற சிறிய காட்சியாக காமெடிக்காக இடம் பெற்றுள்ளது. இதில் கலாச்சார சீரழிவு போன்ற விஷயங்கள் புகுத்தபடவில்லை, நல்ல படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது. அண்மையில் வெளியான சில படங்கள் இதற்கு எடுத்துகாட்டாக இருக்கிறது என்றார்.

பின்னர் நிருபர்கள் எழுப்பிய தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி, “ஓட்டுக்கு பணம் வழங்குவது, பெறுவது தவறாக இருந்தாலும் வறுமை, சூழ்நிலை கருதி ஓட்டுக்கு வழங்கப்படும் பணத்தை வாங்கி கொள்ளலாம். அது உங்கள் பணம் தான். ஆனால் பணம் பெற்றதால் அந்த கட்சிக்குதான் ஓட்டு என்பதை முடிவு செய்யாமல், நல்லவர்களுக்கு ஓட்டளிக்கலாம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.