காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: நேரில் சந்தித்து விளக்க அனுமதி கேட்டு பிரதமருக்கு கார்கே கடிதம்

புதுடெல்லி,

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான காங்கிரசின் தலைவர் சாம் பிட்ரோடா, சமீபத்தில் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பேசும்போது, அமெரிக்காவில் பரம்பரை வரி சட்டம் மற்றும் சொத்துகளை மறுபகிர்வு செய்யும் விவகாரம் பற்றி குறிப்பிட்டு பேசினார்.

இந்நிலையில், சத்தீஷ்காரில் பிரசாரத்தின்போது பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, காங்கிரசை தாக்கி பேசினார். அப்போது அவர், காங்கிரசின் ஆபத்துக்குரிய நோக்கங்கள் மீண்டும் நம் முன்னே வெளிவந்துள்ளன. பெற்றோரிடம் இருந்து அவர்களுடைய குழந்தைகளுக்கு கிடைக்கும் சொத்துகள் மீது பரம்பரை வரி விதிப்பது பற்றி காங்கிரசார் பேசி வருகின்றனர் என கூறினார்.

இந்நிலையில், பிட்ரோடாவின் பரம்பரை வரி பற்றிய பேச்சுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என காங்கிரஸ் கட்சி கூறியது. காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இதுபோன்ற விசயங்கள் இடம் பெறவில்லை என்றும் தெரிவித்தது.

இந்த சூழலில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 2 பக்கம் கொண்ட அந்த கடிதத்தில், காங்கிரஸ் கட்சியின் நியாய பத்திரம் ஆனது, அனைத்து சாதி மற்றும் சமூகத்தின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு நியாயம் வழங்க கூடிய நோக்கம் கொண்டது என தெரிவித்து இருக்கிறார். நியாய பத்ரா என்ற பெயரில் தன்னுடைய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது.

குறிப்பிடப்பட்ட விசயங்களில், சில வார்த்தைகளை மட்டும் எடுத்து கொண்டு, வகுப்புவாத பிளவை ஏற்படுத்துவது உங்களுடைய பழக்கம் ஆகவே மாறி விட்டது. இந்த வகையில் பேசி, உங்களுடைய பதவியின் கண்ணியம் குறையும் வகையில் நீங்கள் செயல்படுகிறீர்கள்.

உங்களுக்கு ஆலோசனை கூறுபவர்கள் தவறுதலாக தகவல் தெரிவித்து உள்ளனர். எங்களுடைய தேர்தல் அறிக்கையில் கூட இல்லாத விசயங்களை பற்றி தவறுதலாக உங்களுக்கு கூறியிருக்கின்றனர்.

எங்களுடைய நியாய பத்திரம் பற்றி விளக்கம் அளிக்க உங்களை நேரில் சந்திப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தரும். அதனால், நாட்டின் பிரதமராக, பொய்யான அறிக்கைகளை வெளியிடாமல் இருப்பீர்கள் என்று அதில் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி, தன்னுடைய சமீபத்திய பேச்சுகளில் கூறிய விசயங்களை பற்றி நான் அதிர்ச்சியடையவோ அல்லது ஆச்சரியமடையவோ இல்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.