ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் மனைவி இடைத்தேர்தலில் போட்டி

ராஞ்சி,

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன். இவர் மே 20-ந்தேதி வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படும், கிரிதி மாவட்டத்திற்கு உட்பட்ட காந்தே சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்து அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

அரசு நிலங்களை சட்ட விரோத கையகப்படுத்துதல், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் ஹேமந்த் சோரனுக்கு எதிராக எழுந்தது. இதனை தொடர்ந்து, அமலாக்கத்துறை அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

இந்த வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து முதல்-மந்திரி பதவியில் இருந்து அவர் விலகினார். புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றார்.

இந்நிலையில், முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.எல்.ஏ. சர்ப்ராஸ் அகமது பதவி விலகினார்.

கல்பனா சோரன் எம்.டெக் மற்றும் எம்.பி.ஏ. படிப்பு படித்துள்ளார். ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பரிபாத நகரில் பள்ளி படிப்பை முடித்திருக்கிறார். புவனேஸ்வர் நகரில் வெவ்வேறு கல்வி மையங்களில் எம்.டெக் மற்றும் எம்.பி.ஏ. படிப்புகளை முடித்துள்ளார்.

கிரிதி மாவட்டத்தில் நடந்த கட்சியின் 51-வது நிறுவன நாளில் கல்பனாவின் அரசியல் பயணம் தொடங்கியது. அப்போது அவர், 2019-ல் ஹேமந்த் சோரன் தலைமையில் கூட்டணி அரசு அமைந்தது முதல் எதிரிகளால் சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. அவரை சிறையில் தள்ளியவர்களுக்கு சரியான பதிலடியை ஜார்க்கண்ட் மக்கள் தருவார்கள் என கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.