20 ஓவர் உலக கோப்பை: இந்திய அணியில் 3 பிளேயர்களுக்கு வாய்ப்பில்லை!

20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தங்களது இடத்தை உறுதி செய்யும் வகையில் ஐபிஎல் 2024ல் இந்திய வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஐபிஎல் தொடரின் முதல் பாதி நிறைவடைந்து அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கும் நிலையில், வீரர்கள் யாரெல்லாம் பார்மில் இருக்கிறார்கள்?, யார் எல்லாம் பார்மில் இல்லாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள் என பிசிசிஐ கவனித்துக் கொண்டிருக்கிறது. 20 ஓவர் உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணிக்கான பட்டியலில் பாதிபேர் தங்களது பெயரை உறுதி செய்துவிட்ட நிலையில், சில இடங்களுக்கு யாரை தேர்வு செய்யலாம் என ஆலோசித்துக் கொண்டிருக்கிறது பிசிசிஐ.

அதனால், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற மாட்டார்கள் என தெரிகிறது. மூன்று பேரும் பார்மில் இல்லை. கடந்த முறை குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக களம் கண்ட ஹர்திக் பாண்டியா இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறார். அவரின் வருகை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பலத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் மிக மோசமாக இருக்கிறது. 

பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருக்கிறார். ஒரு கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எந்தவகையிலும் அவரால் பங்களிக்க முடியவில்லை. இக்கட்டான நேரங்களில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்கள் ரோகித் சர்மாவிடம் மட்டுமே ஆலோசனை செய்கின்றனர். ஹர்திக் பாண்டியா இருந்தாலும் அவருடன் ஆலோசிப்பதில்லை. இதனால், மன உளைச்சலில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைப்பது சந்தேகமே என்கிறது பிசிசிஐ வட்டாரம்.

அடுத்தாக, இஷான் கிஷன் மோசமான பார்ம் தொடர்கிறது. ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுமாறு அவரை பிசிசிஐ கேட்டுக் கொண்டபோதும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி எப்படியாவது இந்திய அணிக்கு திரும்பிவிடலாம் என இஷான் கண்ட கனவு இப்போது பொய்த்து போய்யிருக்கிறது. இனி அவருக்கான இடம் இந்திய அணியில் இல்லை என்றே கூறுகிறது பிசிசிஐ வட்டாரம். ஏனென்றால் இஷான் கிஷன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதுடன் பிசிசிஐ விடுத்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தவே இல்லை என்பதால் அவரின் சர்வதேச கிரிக்கெட் பயணம் ஐபிஎல் தொடருக்குப் பிறகு முடிவை நோக்கி செல்ல இருக்கிறது.

அடுத்ததாக, முகமது சிராஜ். ஆர்சிபி அணிக்காக விளையாடும் அவர் பந்துவீச்சு படுமோசமாக இருக்கிறது. முக்கிய ஆட்டங்களில் தாறுமாறாக ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் அவர், ஒரு பந்துவீச்சாளராக ஐபிஎல் தொடரில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் அவர் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை. இவர்களை தவிர்த்து ஐபிஎல் தொடரில் இப்போது சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும் ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.