மதுரையில், ஜனவரி 27 மற்றும் 28-ம் தேதிகளில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி நடைபெறுகிறது என பள்ளிக்கல்வி ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு வல்லுநர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு, தலைமை திறன், மேலாண்மை ஆகிய கருத்துருகளில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சிஅளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி ஜனவரி 27 மற்றும் 28-ம் தேதிகளில் மதுரையில் நேரடி முறையில் நடத்தப்பட உள்ளது.
இதில் பங்கேற்க வேண்டிய தலைமை ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பட்டியலில் உள்ளவர்களை பணியில் இருந்து விடுவித்து பயிற்சியில் தவறாமல் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.