புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் சாதிய பாகுபாடு காட்டியதாக கைது செய்யப்பட்ட இருவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பட்டியலின மக்களிடம் ஜாதிய பாகுபாடு காட்டியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த மாதம் 27ஆம் தேதி அதே கிராமத்தை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் மூக்கையா மற்றும் சிங்கம்மாள் என்ற பெண்மணி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு நேற்று முன்தினம் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி இருந்தது. ஆனால் இருவரும் ஜாமீன்தாரரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாததால் அவர்கள் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் மூக்கையாவின் தாயார் தங்கம்மாள்(80) இன்று காலை உடல் நலக்குறைவால் உயிர் இழந்ததையடுத்து அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டுமென அவரது உறவினர்கள் மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்டனர்.
இதனை ஏற்ற வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி, மூக்கையா மற்றும் சிங்கம்மாள் ஆகிய இருவருக்கும் நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கினார். இதனையடுத்து புதுக்கோட்டை சிறையில் இருந்த மூக்கையா, திருச்சி மகளிர் சிறையில் உள்ள சிங்கம்மாள் ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
newstm.in