தமிழர்கள் எங்கிருந்தாலும் காப்பாற்றும் இயக்கம் தி.மு.க.- மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருவாவடுதுறை நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் இல்லத்திருமணம் இன்று நடைபெற்றது.

மணமக்கள் கருணா ரத்தினம்- காவ்யா திருமணத்தை முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
தலைமை தாங்கி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

63 வயதில் அடியெடுத்து வைத்துள்ள எனது துணைவியாருக்கு முதலில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். எல்லோரும் இங்கு பேசும்போது, ‘‘இது தளபதி வீட்டுத்திருமணம். நம்முடைய வீட்டு திருமணம்’’ என்று அவரவர் பாணியில் வாழ்த்துரையில் பேசினார்கள்.

ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமானால் இது கழக குடும்பத் திருமணம். 2011-ம் ஆண்டு சத்யா ஸ்டூடியோ எதிரில் உள்ள டி.என்.ராஜரத்தினம் கலையரங்கை திறந்து வைத்து கலைஞர் பேசுகையில், ‘‘டி.என்.ஆர். பற்றியும், அவரது பெருமைகளை பற்றியும் உலகறிய எடுத்துக்கூறினார்.

58 ஆண்டுகளே டி.என்.ஆர். வாழ்ந்திருந்தாலும் இசை உலகிலே உலகளவில் பெருமை பெற்று விளங்கினார் என்பது வரலாறு. சுயமரியாதையை அந்த நாட்களிலேயே நிலைநாட்டியவர் டி.என்.ஆர்.

தனது தனித்தன்மையை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கமாட்டார். யாருக்கும் தலைவணங்கிட மாட்டார். அப்படிப்பட்ட சுயமரியாதைக்காரராக வாழ்ந்தவர் அவர்.

1955-ம் ஆண்டு ஆவடியில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு ஜவஹர்லால் நேரு வந்திருந்தார். அந்த மாநாட்டையொட்டி ஊர்வலமும் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் முன் வரிசையில் நின்று நாதஸ்வரம் வாசித்தவர் தான் நம்முடைய ராஜரத்தினம் பிள்ளை.

தாழ்ந்து கிடந்த இசைக்கலைஞர்களை உயர்த்தியவர் அவர். கழகத்தின்பால் இந்த திருமணத்திற்கு நீண்ட தொடர்பு உண்டு என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ் உணர்வோடு, தமிழ்ப்பற்றோடு இருந்த, இருந்து கொண்டிருக்கிற இந்த குடும்பத்தில் திருமணம் நடைபெறுகிறது.

தமிழ் என்றால் நமக்கு தானாகவே ஒரு உத்வேகம் வருகிறது. அது உள்ளூர் தமிழனாக இருந்தாலும், உக்ரைனில் இருந்த தமிழனாக இருந்தாலும் சரி அவர்களை காப்பாற்றுகிற ஒரே இயக்கம் இந்த இயக்கம் என்பது உங்களுக்கு தெரியும்.

உக்ரைனில் இருந்திருக்கக் கூடியவர்கள் அகதிகளாக போய் விடுவார்களோ அல்லது ஆபத்தில் சிக்கி விடுவார்களோ என்று கருதிக்கொண்டிருந்த நேரத்தில் ஏறக்குறைய தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் இந்தியாவில் எந்த மாநிலமும் முன்வராத நிலையில் முதல்முதலில் தமிழ்நாட்டில்தான் அவர்கள் அத்தனை பேரையும் அழைத்து வருவதற்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அவர்கள் அத்தனை பேரையும் பத்திரமாக அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக என்னென்ன முயற்சிகள் எடுத்தோம் என்பது உங்களுக்கு தெரியும். நேற்றோடு தமிழ்நாட்டை சேர்ந்த அத்தனை பேரும் வந்து சேர்ந்துவிட்டார்கள்.

கடைசியாக வந்த 9 பேரையும் வரவேற்பதற்காக நானே விமான நிலையத்திற்கு சென்று அவர்களை வரவேற்ற அந்த காட்சியை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அதற்காக திருச்சி சிவா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அரசு அதிகாரிகள் குழு டெல்லியில் 10 நாட்களாக அங்கேயே தங்கி இருந்து அத்தனை பேரையும் அழைத்து வந்திருக்கிறார்கள்.

எனவே தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை காப்பாற்றுகிற ஒரே இயக்கம் தி.மு.க. என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இதை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.