ஆஸ்கர் விழா கோலாகலம்: விருதுகளை குவித்தது டியூன்| Dinamalar

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் நேற்று நடந்த, 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், கோடா சிறந்த திரைப்படமாக தேர்வானது. தி பவர் ஆப் தி டாக் படத்தை இயக்கிய ஜேன் காம்பியன் சிறந்த இயக்குனராகவும், வில் ஸ்மித் சிறந்த நடிகராகவும், ஜெசிக்கா சாஸ்டெய்ன் சிறந்த நடிகையாகவும் தேர்வாகினர்.

டியூன் திரைப்படம் ஆறு பிரிவுகளில் விருதுகளை குவித்தது.உலக திரைப்படக் கலைஞர்களால் பெரிதும் மதிக்கப்படும் ஆஸ்கர் விருதுகளின், 94ம் ஆண்டு விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடந்தது. ஹாலிவுட்டில் சிறந்த திரைப்படத்துக்கான விருதை, கோடா திரைப்படம் வென்றது. சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை மற்றும் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் இத்திரைப்படம் வென்றது.

சிறந்த தழுவப்பட்ட திரைக்கதைக்கான விருது, கோடா படத்தின் இயக்குனர் சியன் ஹிடருக்கும், நடிகர் டிராய் காட்சருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டன.செவித்திறன் குறைபாடு உள்ள குடும்பத்தினரை சுற்றி கோடா திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் நிஜ வாழ்விலும் காது கேளாதவர்களாக உள்ளனர்.

விருது பெற்ற நடிகர் டிராய் காட்சர் நிஜத்திலும் காது கேளாதவர்.தி பவர் ஆப் தி டாக் திரைப்படத்தை இயக்கிய ஜேன் காம்பியன், சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றார். ஆஸ்கர் விருதை வெல்லும் மூன்றாவது பெண் இயக்குனர் என்ற பெருமையை ஜேன் பெற்றுள்ளார்.இவருக்கு முன்னதாக ஹர்ட் லாக்கர் படத்தை இயக்கிய கேத்தரின் பிகேலோ 2010ம் ஆண்டிலும், நோமட் லாண்ட் படத்தை இயக்கிய க்ளோயி ஸாவோ கடந்த ஆண்டும்

சிறந்த இயக்குனர்களுக்கான விருதுகளை வென்றனர்.கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்த வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். தி ஐஸ் ஆப் டேமி பேயி படத்தில் நடித்த ஜெசிக்கா சாஸ்டெய்ன், சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். சிறந்த துணை நடிகைக்கான விருது, வெஸ்ட் சைடு ஸ்டோரி படத்தில் நடித்த ஏரியானா டிபோசுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நேரடி திரைக்கதைக்கான விருது, பெல்பாஸ்ட் திரைப்படத்தின் இயக்குனர் கென்னத் பிரனாகுக்கு வழங்கப்பட்டது. டெனிஸ் வில்லெனு இயக்கிய டியூன் திரைப்படம் ஆறு பிரிவுகளில் விருதுகளை தட்டிச் சென்றது. சிறந்த காட்சியமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலிக்கலவை ஆகிய ஆறு பிரிவுகளில் விருதுகளை வென்றது.

சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில், டிரைவ் மை கார் என்ற ஜப்பான் மொழி திரைப்படம் விருதை வென்றது.சிறந்த ஆவணப்படத்துக்கான பிரிவில், இந்தியா சார்பில் போட்டியிட்ட ரைட்டிங் வித் பையர் என்ற ஆவணப்படம் விருதை தவறவிட்டது. அமெரிக்க தயாரிப்பான சம்மர் ஆப் சோல் என்ற படத்துக்கு, சிறந்த ஆவணப்படத்துக்கான விருது வழங்கப்பட்டது.

ஆஸ்கர் விழாவில் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, 30 வினாடிகள் அரங்கில் அமைதி காக்கப்பட்டது.மனைவியை கேலி செய்தவரை அறைந்த நடிகர்சிறந்த நடிகராக வில் ஸ்மித் அறிவிக்கப்படுவதற்கு சில நிமிடங்கள் முன், சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை அறிவிக்க, ‘ஹாலிவுட்’ நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் மேடைக்கு வந்தார்.

அப்போது, காமெடி செய்வதாக நினைத்து, நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் சிகை அலங்காரம் குறித்து உருவ கேலி செய்யும் விதமாக பேசினார். மேடை ஏறி வந்த வில் ஸ்மித், யாரும் எதிர்பாராத வகையில் கிறிஸ் ராக் கன்னத்தில், ‘பளார்’ என அறைந்தார். பின்னர் மீண்டும் தன் இருக்கையில் வந்து அமர்ந்த வில் ஸ்மித், ”என் மனைவியின் பெயரை இனி உச்சரிக்காதீர்கள்,” என உரக்க கத்தினார்.

இதனால், அரங்கமே சில வினாடிகள் அதிர்ச்சியில் உறைந்தது. வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட், ‘அலோபீசியா’ என்ற ஒரு வகை நோய் எதிர்ப்பு குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவரது தலைமுடி முழுதுமாக கொட்டி உள்ளது. இதை கேலி செய்ததால் ஸ்மித் ஆத்திரம் அடைந்ததாக கூறப்படுகிறது.சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற வில் ஸ்மித் பேசுகையில், ”ஆஸ்கர் விருது குழுவிடமும், சக போட்டியாளர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். வாழ்க்கையை தான் கலை பிரதிபலிக்கிறது. தீவிரமான காதல் உங்களை எதையும் செய்யத் துாண்டும்,” என, கண்ணீர் மல்க பேசினார்.

அடி வாங்கிய நடிகரிடம் வில் ஸ்மித் மன்னிப்பு கோரவில்லை. இந்த சம்பவம் குறித்து அடி வாங்கிய கிறிஸ் ராக், புகார் கொடுக்க விரும்பவில்லை என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.விழா முடிந்த பின், ஆஸ்கர் விழா குழுவினர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘வன்முறையை எந்த வடிவிலும் நாங்கள் ஆதரிக்கவில்லை’ என பதிவிட்டுள்ளனர்.ரசிகர்கள் அதிருப்திமுந்தைய ஆண்டு மறைந்த சர்வதேச திரைப் பிரபலங்களை ஆஸ்கர் விழாவில் நினைவுபடுத்துவது வழக்கம்.

இந்த வகையில், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மறைந்த கலைஞர்கள் நேற்றைய விழாவில் நினைவு படுத்தப்பட்டனர். இதில், நம் நாட்டைச் சேர்ந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், பாலிவுட் நடிகர் திலீப் குமார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள், சமூக வலைதளங்களில் அதிருப்தியை பதிவு செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.