புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கியஆயுதங்களை அழித்துவிட்டதாகவும் முக்கிய விமான நிலைய ஓடு பாதையை தகர்த்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 2 மாதங்களைக் கடந்து தொடர்கிறது. ரஷ்யாவின் தாக்கு தலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
மரியுபோல் நகரில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால், சோவியத் காலத்து உருக்கு ஆலை பகுதியில் உள்ள தரைகீழ் தளத்தில் சுமார் 1,000 பொதுமக்களும் 2,000 உக்ரைன் வீரர்களும் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க ஐ.நா. சபை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் சில பெண்கள் மற்றும் குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதனிடையே, உக்ரைனின் ஒடேசா நகரில் உள்ள விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட ஓடுதளம் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரைமியா பகுதியில்இருந்து நடத்தப்பட்ட இந்தத்தாக்குதலில் ஓடுதளம் முற்றிலும் சேதமடைந்ததாக ஒடேசா மாகாண ஆளுநர் மக்சிம் மார்ச்சென்கோ தெரிவித்துள்ளார்.
ஒடேசா விமான நிலைய ஓடுபாதையை தகர்த்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கியஆயுதங்களை அழித்துவிட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேலும் கார்கிவ் பகுதியில் உக்ரைனின் 2 சு-24எம் ரக போர்விமானங்களை தங்கள் நாட்டின் வான் பாதுகாப்பு கருவிகள் சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, உக்ரைன் அதிபர் ஜெலஸ்கியை கீவ் நகரில் சந்தித்துப் பேசியுள்ளார்.