புதுடெல்லி: கடந்த நிதி ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பின்போது, மத்திய அரசு வாகன அழிப்புக் கொள்கையை அறிவித்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் தனிநபர் வாகனங்களும் 15 ஆண்டுகளுக்கு மேலான வர்த்தக வாகனங்களும் தகுதி சோதனைக்கு உட்படுத்தப்படும். தேர்ச்சியடையாத வாகனங்கள் அழிக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியது.
வாகன அழிப்புக் கொள்கை இவ்வாண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு நிகழ்வில் பேசினார். அப்போது அவர் ‘தெற்காசியாவின் வாகன அழிப்புக் கேந்திரமாக உருவாகுவதற்கான சாத்தியத்தை இந்தியா கொண்டிருக் கிறது. ஒவ்வொரு நகர மையத்திலிருந்து 150 கிலோ மீட்டருக்குள் ஒரு வாகன அழிப்பு மையத்தை உருவாக்குவதே இலக்கு’ என்றார். மேலும் அவர், ‘வாகன அழிப்புக் கொள்கை இந்திய போக்குவரத்துத் துறையில் முக்கியமான முன்னெடுப்புகளில் ஒன்றாகும். இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புஏற்படுத்தும் பழைய வாகனங்கள்அழிக்கப்பட்டு, ஒப்பிட்டளவில் சுற்றுச்சூழலுக்கு குறைவானபாதிப்பு ஏற்படுத்தும் புதிய வாகனங்கள் படிப்படியாக பயன் பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
இதனால் நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் வாகனஅழிப்பு மையத்தை உருவாக்கி வருகிறோம். அழிக்கப்படும் வாகனங்களின் உதிரி பாகங்கள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும்.
இது 4 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும். வங்கதேசம், பூடான், மியான்மர், மாலத்தீவு, நேபாளம், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்தும் பழைய வாகனங்களைப் பெற்றுஅவற்றை அழித்துக் கொடுக்கும் வகையில் இந்தியா, தெற்காசியா வின் வாகன அழிப்பு கேந்திரமாக உருவாகும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்தார்.